பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை ஒரு கலை

21


யார்தான் கவிதையை வாழவைக்க முடியும்? கவிதைக்குப் பிறப்பிடந்தான் எது?

வெறும் புறத்தோற்றத்தால் மட்டும் கவிதை அமைந்து விடாது. அவ்வாறு புறத்தோற்றத்தோடு—பட்டாலும், பீதாம்பரத்தாலும், பதக்கங்களாலும் தம்மை அலங்கரித்துக் கொள்வதோடு—நின்றுவிட்ட பிற்காலப் புலவர்தம் பாடல்களும் அவர்தம் வாழ்வோடு நின்றுவிட்டனவே! கவிதைதான் உள்ளத்தின் ஊற்றுப்பெருக்கு. உள்ளம் செம்மைப்பட்டவரே உயரிய கவிதைகள் இயற்றி மங்காப் புகழ்பெற்றுள்ளனர். நம் நாட்டில்—தமிழ்நாட்டில்—மிகு பழங்காலம் தொட்டு, வரலாற்றிலே இவ்வுண்மை விளங்குகின்றது. கவிதையை ஒரு கலையாக—உயிருள்ள மெய்க்கலையாக—வாழவைத்த—உளத்தால் நலம் பரப்பிய புலவர் பலர், வாழ்ந்து சென்றிருக்கின்றனர். முரஞ்சியூர் முடிநாகராயர் முதல் பாரதியார் வரையில், தமிழ் நாட்டில் வாழ்ந்து கவிபாடிய புலவர்களை வரிசையாக வைத்துப் பார்ப்பின் இவ்வுண்மை நன்கு விளங்கும். ஆங்கில நாட்டுப் புலவர்களையும் பிற நாட்டுப் புலவர்களையுங்கூட, இவ்வாறு ஆராய்ந்து காணின், உண்மை தோன்றும் கவிதை தோன்றும் இடமாகிய உள்ளம் சிறந்ததாக அமையவேண்டும். தூய உள்ளத்திே பெருகும் கவிதை உருப்பெற்று உருண்டு ஓடிவரும். அவ்வாறு வரும் கவிதைகள் வையகத்தை வாழ வைக்கும் கவிதைகளாய் விளங்கும். இவற்றையெல்லாம் எண்ணித்தான் போலும் பாரதியார்,

‘உள்ளத்தில் உண்மைஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளிஉண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருந்த குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்:
தெள்ளுற்ற தமிழ்அமுதின் சுவைகண்டார்
இங்குஅமரர் சிறப்புக் கண்டார்.’