பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

கவிதையும் வாழ்க்கையும்



தாலும் வளர்ச்சியடைந்தான் என்பதும், தோன்றிய ஆதி மனிதனிலிருந்து மனித சமுதாயம் மெதுவாக வளர்ந்து உலகில் பல பாகங்களிலும் சென்று வாழ்ந்ததென்தும், தானே உயர்ந்தவன் என்ற எண்ணத்தில் மனிதன் தனது வாழ்க்கையை விலங்கின் வாழ்க்கையிலிருந்து வேற்று வகைக்கு மாற்றிவிடும் நாடும் பிற நலங்களும் தேடிக் கொண்டான் என்பதும், தன்னையும் தன்னைச் சேர்ந்தோர்களையும் காக்க, ஆயுதம் முதலியவற்றை ஆக்கிக்கொண்டான் என்பதும், அவை காலந்தோறும் வளர்ச்சி அடைந்தன என்பதும், அவன் வாழ்வு வளம்பெற வளம்பெற உலகில் நால்வகை நிலங்களிலும் அவன் சிறந்திருந்தான் என்பதும் அவனது சமூக வளர்ச்சியில் மொழியும் கலையும், நாகரிகமும் பண்பாடும், சமயமும் பிற நல்லியல்புகளும் வளர்ச்சியடைந்தன என்பதும், அவற்றோடு கலந்து இன்றைய மனிதன் வாழ்கின்றான் என்பதும், அம் மனிதனே அணுத்துகளுக்கும் அண்ட கோள எல்லைக்கும் இடையில் நடு எல்லையில் அமைகின்றான் என்பதும், அறிந்து கொண்டோம். தமிழர்கள் இத்துணை வாழ்க்கை வகைகளையும் நன்கு துய்த்து ஆராய்ந்து அறிந்து அவ்வாழ்வை இரண்டு வகையாக பிரித்து வாழ்வு நடத்தினார்கள் என்பது நாடறிந்ததே. அவ் வாழ்க்கைப் பிரிவுகளே அகம் புறம் என்பன. அடுத்து அவைபற்றிக் காண்போம். .