பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

4. அகமும் புறமும்


நிலப்பரப்பிலே மக்களினம் தோன்றி வளர்ந்த அதே வகையில் இங்கும் தமிழ்நாட்டில் மனிதஇனம் வளர்ந்து வந்தது. தமிழ் நாட்டில் மக்களினம் தோன்றிய காலத்தைத் திட்டமாக வரையறுக்கக் கூடவில்லை. தமிழ்நாட்டில் உள்ள திராவிட நாகரிகம் மிகுதொன்மை வாய்ந்ததென்று வரலாற்று ஆசிரியர் அனைவரும் ஒருசேரக் கூறுகின்றனர். சிலர் மனித இனமே இங்கேதான் முதன் முதல் தோன்றியிருக்க வேண்டும் என்றும் கூறுவர். எப்படியாயினும், நம் தமிழ்நாட்டில் மக்களினம் வரலாற்று எல்லைக்கு உட்படாத நெடுங்காலத்துக்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஓர் இனம் தோன்றி வளர்ந்துள்ள வரலாற்றை அது வாழும் நாட்டுக் காவியங்களும், கலைகளும் விளக்கிக்காட்டும் என்பர். அவ்வாறாயின், தமிழில் உள்ள இலக்கியங்களும், தமிழ்நாட்டில் உள்ள கலைகளும் இந்நாட்டு மக்களினத்தின் தொன்மையைக் காட்டப் போதிய சான்றுகளாகும். ஒரு நாட்டில் திருந்திய இலக்கியங்கள் உள்ளன எனின், அவ்விலக்கியம் தோன்றும் காலத்துக்கு முன் அது எத்தனையோ வகையில் மாறுபட்டிருக்க வேண்டும், அத்தனை மாற்றங்-