பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமும் புறமும்

225



எடுபடுவதாகும். எனவே, தொல்காப்பியம் போன்ற திருத்திய ஓர் இலக்கணநூல் தமிழில் உண்டாயிருக்க வேண்டுமாயின், அதற்குமுன் எவ்வளவு இலக்கிய நூல்கள் உண்டாயிருக்க வேண்டும்? ஆம்: பல இருந்திருக்கும். ஆயினும் அவற்றையெல்லாம் இன்று நாம் பெறவில்லை. அவை ஊழிகளால் கொள்ளை கொள்ளப்பட்டிருக்கும். எனினும், கால வெள்ளத்தைக் கடந்து நிற்கும் தொல்காப்பியமும் அதை ஒட்டி எழுந்த சங்க இலக்கியங்களும் நமக்குத் தமிழர் வாழ்வை இன்றும் எடுத்துக் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றன.

தொல்காப்பியர் மக்கள் வாழ்க்கையைப் பின்னர்ப் பொருளதிகாரத்தில் பிரிப்பதன் முன்பே, தமிழ் மொழியின் இலக்கணத்தையே மனிதவாழ்வை ஒட்டி அமைத்துள்ளார் எனலாம். அவர்தாம் அவ்வாறு அமைத்தாரா, அன்றி அவ்வாறிருந்த மொழியின் இலக்கணத்தைத்தான் அழகுபடப் புனைந்தாரா என்பதை நாம் ஆராய வேண்டா. வாழ்வினத் துய்க்கும் உயிர்த்தோற்றத்தை எழுத்துக்களின் மேல் வைத்து எழுதியிருக்கும் சூத்திரங்கள் எண்ணற்பாலன. உயிரும் மெய்யும் கூடிய வழிதான், மனிதனும் பிற விலங்குகளும் தோன்றுகின்றன. அவற்றின் வாழ்வும் பிறவும் இவ்விரண்டும் இயைந்திருத்தலாலே அமைகின்றன. மெய் வேறு உயிர் வேறாக இருப்பின், உடலைப் பிணம் என்போம். உயிரையோ, காண இயலாது. இரண்டும் வெவ்வேறாண பொருள்களாயினும், அவை சேர்ந்தாலன்றி உலகில் வாழ்க்கையில்லை. இவற்றையெல்லாம் எழுத்துக்களின் அமைப்பின்மேல் வைத்து ஆசிரியர் தொல்காப்பியர் கூறும் திறன் சிறந்தது. இக் காலத்தில் தமிழ் நலம் பேணும் ஆராய்ச்சியாளர் பலர் தமிழ் மொழி, மனிதன் வாழ்வை ஒட்டி அமைந்த மொழியென்றும், எழுத்துக்களும் அவ் வாழ்வை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளனவென்றும், அவற்றை ஒரு சிறிதும் மாற்றலாகாது என்றும் வாதிப்பதைக் காண்கின்றாம். ஆயினும், அதுபற்றிய ஆராய்ச்சியை இங்கு நாம் கொள்ளாது, தொல்காப்பியர் எழுத்துக்களின் வழியே உயிர்த்தோற்றத்தின் வாழ்வைக் காட்டுவதைக் காண்போம்.