பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

கவிதையும் வாழ்க்கையும்


உயிர் தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாதது. அது போன்றதே உடலும். உயிர் உள்ளது என்பதை நாம் வெட்ட வெளியில் காண இயலாது. அது உண்மையையும் இன்மையையும், அவ்வுயிர் உடலோடு கலக்கும் காலத்தும், நீங்கும் காலத்துந்தான் அறிகின்றோம். ஆகவே, தனித்து உயிரைக் காண இயலாவிடினும் அதை மெய்யோடு கலக்கும் காலத்தில் உணர்கின்றோம். இந்த உண்மையினை உயிர்மெய் எழுத்தின் இலக்கணம் கூற வருங்காலத்தில் தொல்காப்பியர் குறிக்கின்றோர்.

‘மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே’

என்பது சூத்திரம். இது இலக்கணச் சூத்திரம் என்பதை மறந்து, நாம் மேலே கண்ட உயிர்த்தோற்ற அமைப்போடு ஒத்து நோக்கின், உண்மை நன்கு புலப்படும். உயிர் தானே தனித்து எங்கும் தோன்றுவது இல்லை. அது எந்த ஓர் உடம்பிலாவது ஒன்றித்தான் தோன்றும். ‘செல்’ அல்லது 'அமீபா'[1] தொடங்கி, இன்றைய மனிதன்வரை இது உண்மையன்றோ? உடல் எத்தனையோ வகையில் மாறி மாறி வந்துள்ளது. ஆனால், அந்த உடல்களிலெல்லாம் பொருந்தித் தோன்றும் உயிரைப்பற்றி நாமொன்று மறியோம்—உயிர் ஒரு மெய்யைப் பற்றித்தான் தோன்றுகிறது என்ற ஒன்றைத் தவிர. இந்த உண்மையை அச்சூத்திரம் 'ஏ'காரம் கொடுத்துத் திட்டமாக எடுத்துக் காட்டுகின்றது.

இனி, இவ்வாறு பல்வேறு மெய்களோடு பொருந்திவரும் உயிரின் நிலைதான் என்ன? உடம்பு அழிகின்றது. உயிர் அழிகிறதா? இல்லை என்பதே அனைவருடைய உடன்பாடும் ஆகும். எல்லாச் சமயங்களும் உயிர் அழியாத ஒன்று என்று தான் கூறுகின்றன. ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்.’ என்ற திருமூலர் வாக்கினைக் காட்டிச் சிலர், ‘அவர் உயிர் அழிவினையும் கூறியுள்ளாரே?’ எனலாம். ஆனால், அந்த அடியினையும், அதை ஒட்டி வருகின்ற அடிகளையும், உயிர்


  1. 1. Cell or Amoeba