பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமும் புறமும்

229



கொள்ளவேண்டும். முதலில் அகம் எத்தகையது என்பதைக் கண்டு மேலே செல்வோம். அகம் என்ற சொல்லுக்கு உள்ளிடம் என்பது பொருள். பிறருக்குப் புலப்படாததாய் உள்ளே நிற்பது மனிதனது ஆறாவது அறிவாகிய மனமன்றோ! அகம் என்றும், உள் என்றும் நாம் வாழும் வீட்டினைக் கூறுகின்றோம். தமக்கு அயலாராகிய பிறரை நோக்க, அவர்களுக்கு மறை விடமாகப் புலனாகாம லிருப்பதாலேயே உள் வீட்டை அகமென்றும், அந்தப்புர மெனவும் வழங்குகின்றனர் போலும்! ஆனால், இந்த உள்ளம் யாராலும் அணுகிக் காண முடியாத ஒன்று. காதலர் இருவருள் ஒருவருக்கு ஒருவர் அங்கே இடம் தரலாம். 'இருவரும் மாறிப்புக்கு இதய மெய்தினார்’ என்ற காதலர் நிலையை விளக்கும் கட்டம் சிறந்ததாகும். உண்மைக் காதல் வாழ்வில் உள்ளம் பரிமாறிக் கொள்ளுதல்தான் முதல் இடம். அந்த உள்ளத்தில் தன் காதலியோ, காதலனோ அமர்ந்துவிடுவானாயின், அந்த உள்ளம் மகிழ்ச்சியால் 'துள்ளும். அந்த இன்பத்தைத்தான் ‘அகம்' என்றனர் ஆன்றோர். நினைத்தால் மகிழ்ச்சி பிறக்குமா? இந்தக் கேள்விக்கு வள்ளுவர் அழகாக விடை கூறுகின்றார்:

"உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக் கில்; காமத்துக்கு உண்டு:

(குறள், 181)

என்கின்றார். தம் காதலரையும், அவரொடு பெற்ற இன்பத்தையும் எண்ணி மகிழ்தலும், ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்தலும் காதல் வாழ்வின் சிறந்த பண்புகள். வள்ளுவர் இங்கே அந்த இன்பத்தைக் 'காமம்' எனக் குறிக்கின்றார். காமம் என்பது பிற்காலத்தில் இழிந்த பொருளில் வழங்கி வந்த போதிலும், அது பண்டைநாளில் உள்ள மகிழ்தலாகிய உயர்ந்த பொருளிலேயேதான் வழங்கி வந்தது, வள்ளுவர் தம் 'இன்பத்துப்'பாலுக்கே 'காமத்துப் பால்’ என்றுதான் பெயர் வழங்கக் காண்கின்றோம். 'உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே' என்று காமத்தின் சிறப்பை யெல்லாம் பாராட்டும் சங்கப் பாடல்கள் எத்தனையோ! எனவே, காமம் என்பது