பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

கவிதையும் வாழ்க்கையும்



இழிபொருளைத் தருவதன்று. காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்ட, அந்த இன்பந்தான் காமம். அக்காம நுகர்வு இத்தகையது என உரையாசிரியர் நச்சினர்கினியர் தம் தொல் காப்பிய அகத்திணை இயல் முதல் சூத்திரத்திலேயே அழகாகச் சொல்லுகின்றார்.

'ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத்து உணர்வே, நுகர்ந்து இன்ப முறுவதோர் பொருளாதலின், அதனை அகம் என்றார். எனவே, "அகத்து நிகழ்கின்ற இன்பத்துக்கு 'அகம்’ என்பது ஓர் ஆகுபெயராம்!" என்கின்றார் நச்சினார்க்கினியர். மனிதன் தன் வளர்ச்சியின் எல்லையிலே பெற்ற ஆறாவது அறிவின் முழுப்பயனையும் துய்க்கும் ஒரு வற்றாத இன்ப நிலைக்களனே அகம் என்பது. உலகில் உயிர்த் தோற்றங்கள் அத்தனையும், ஆணும் பெண்ணுமாகவே இலங்குவதைக் காண்கின்றோம். தோன்றிய நாள் தொட்டு இன்றுவரை, ஓரறிவுடைய உயிர் தொடங்கி ஆறறிவுடைய மனிதன் வரையில், ஆண் பெண் கூறுபாடுகளைக் கண்டுதான் வருகின்றோம். அந்தக் கூறுபாட்டின் தோற்ற அமைப்பே, அவை கூடி வாழ்வதிலேதான் பிறந்தது என்பதை நமக்கு உணர்த்தவில்லையோ? இந்த உண்மையை அறியாத சிலர், அனைத்தும் பொய்யெனவும், அக் காதல் இன்பம் வேண்டத்தகாதது எனவும் ஒதுக்குவர். தமக்கு வேண்டாததை இல்லை என்று கூறும் நாத்திக வாதத்தை ஒத்து, வள்ளுவர் காமத்துப்பாலைப் பாடவே இல்லை என்று. பேசுகின்றவரும் நாட்டில் உண்டு. ஆனால், ஆய்ந்து சிந்திப்பின், உலகமே ஆண்பெண் கலந்த ஒன்று என்பது நன்கு புலனாகும். தமிழர்கள், இந்த அக வாழ்வை நன்கு அறிந்து துய்த்தவர்கள் என்பது அவர்தம் கவிதைகளால் நன்கு விளங்குகின்றது. சங்ககாலப் பாடல்களாகத் தொகுக்கப்பட்டவற்றுள் முக்காற்பகுதிக்கு மேலாக அகம் பற்றியே பாடுகின்றன. இரண்டொன்று புறம் பற்றி