பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமும் புறமும்

235




'முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்.'

என்று இளங்கோவடிகள் பாலையை மற்றவற்றினின்றும் பிரித்துக் காட்டுகின்றார். எனவே, 'பாலை' என்பது திரிபால் அமைவது. எனவே, அதன் ஒழுக்கமும் அவ்வாறே அமைகின்றது. அதன் ஒழுக்கம் 'பிரிவு' என்பது. இப்பிரிவு ஒரு நிலத்துக்கு உரியதாகுமா? நால்வகை நிலத்தில் மக்கள் கொள்ளும் அக் காதல் வாழ்வில் எல்லாம் பிரிவு இன்றியமையாது இலங்குவதுதானே? பிரிவின்றேல், பிரிதற்றுன்பமும், பின் புணர்தல் இன்பமும், இடைவழித் தோன்றும் இரங்கலும், ஊடலும், இல்லிருத்தலும் எங்ஙனம் நிகழும்? எனவே, பிரிவாகிய பாலை ஒழுக்கமும், தான் வழங்கும் நிலம் மற்ற நிலங்களுக்குப் பொதுவாமாறு போலவே, தானும் பிற ஒழுக்கங்களுக் கெல்லாம் பொதுவாய் அமைகின்றது. அதனாலேயே பாடற்ருெகுதிகளில் பாலை பற்றியன அதிகம் உள்ளன. இவ்வாறு ஐந்திணையும் அவற்றின் அடிப்படையில் வரும் ஐந்து ஒழுக்கமுமே'அன்பின் ஐந்திணை' என்று தொல்காப்பியர் தொடங்கி இன்றுவரை சிறந்த முறையில் போற்றப்பட்டு வந்துள்ளன. அவற்றின் விரிவெல்லாம் ஈண்டு விரிப்பின் பெருகும். .

இனி, இந்த அகப்பொருளாகிய உள்ளத்து உணரும் நிகழ்ச்சிகளைப் புலவர்கள் எப்படித்தான் பாடினர்கள் என்பதை அறிதல் வேண்டும். மேலே கவிதையில் கண்ட இறைச்சி, உள்ளுறை, உவமம் போன்றவையும், அவற்றின் அடிப்படை களாகிய அவ்வந்நிலத்துப் பொருள்களும் பிறவும் புலவர் களுக்குப் பெரும் பயன் தந்தன. ஒவ்வொரு நிலத்தைப் பற்றிப் பாடும்போதும், அவ்வந்நிலத்துக்குரிய முதல், கரு, உரி, எனும் பொருள்களையே கவிதைகளில் காண இயலும். அக இன்பத்துக்கு உரிய தலைவன் தலைவியரைப் பற்றிய குறிப்பினும், இந்த முப்பொருள்களே ஆகப்பாடல்களில் அதிகமாகப் பயின்று