பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

கவிதையும் வாழ்க்கையும்



வருவன. அதனாலேதான் தொல்காப்பியரும் அகப்பொருட் பாடலைப் பற்றிக் குறிக்கும்போது,

'முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலும் காலே முறை சிறந்தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை'

என்கின்றார். இந்த முப்பொருளும் இல்லையாயின், தலைவியும் தலைவனும் அவரைச் சார்ந்தோரும் இருப்பினும், அகப்பொருள் சிறவாதென்பது இதன் கருத்தன்றோ! எப்படிச் சிறக்க முடியும்? தலைவனும் தலைவியும் காணும் சோலையும், ஆடும் புனலும், பிற இயற்கைப் பொருள்களும், அவற்றிற்கு முதலாகிய நிலமும் பொழுதும், அவ்வந்நிலத்துக்கே உரியனவாகிய ஒழுக்கப் பொருள்களும் இன்றேல், அகப்பொருள் சிறக்க வழியேது? இப்படிக் காதலருடன் பிற பொருள்களையும் பின்னிப் பிணைத்துப் பேசும்போதுதான் கவிஞன் சில சமயம் கற்பனைக் கடலுள் மிதக்க நேரிடும்; அப்போதுதான் உவமையும் உருவகமும் அவன் உள்ளத்தில் உதித்தோங்கும். அவற்றுடன் கவிஞன் உலகியலோடு சில புனைந்துரைகளையும் புகுத்துவான். இவற்றையெல்லாம் கலந்தே அகப்பாடல் சிறக்கும் என்பதை நம்பி அகப்பொருள் ஆசிரியர்,

'

அதுவே,
புனைந்துரை உலகியல் எனும்திறன் இரண்டினும்
தொல்லியல் வழாமல் சொல்லவும் படுமே
;

என்று காட்டினார். தொல்காப்பியரும்,

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்.'

(அகத்: 56)

என்று கூறுகின்றார். எனவே, அகப்பொருள் பற்றிய கவிதைகளுள் ஓரளவு நாடகவழக்கும் புனைந்துரையும் இடம் பெறும் என்பதும் அறியக் கிடக்கின்றது. ஆயினும், அப் புனைந்துரை எல்லையற்றுச் செல்லின் இனிமை பயவாது கழிவதோடு, எடுத்த பொருளை விளக்கவும் முடியாத நிலை உண்டாகுமாதலின்,