பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

கவிதையும் வாழ்க்கையும்



கின்றார். அகப்பொருள், வாழ்வுக்கு இன்றியமையாததென்பதைத்தான் தம் பொருளதிதாரத்தின் பெரும்பகுதியில் விளக்கிக் கொண்டு செல்கின்றார். தலைவனும் தலைவியும் உள்ளத்துணர்வாலேயே உற்றுப் பெறும் இன்பம் அகப் பொருள்தான் என்றாலும், அவ்வின்பம் சிறத்தற்கு அவர்களைச் சுற்றி இன்னார் இருக்கவேண்டும் என்றும், இன்னின்ன பொருள்கள் தேவை யானவை என்றும், காலமும் பொழுதும் வாலிதின் நோக்க வேண்டும் என்றும், அனைத்தினும் மரபு நெறி கெடாத வாழ்க்கையே செம்மை நலம் சேர்ந்ததென்றும் காட்டுவர் தொல்காப்பியர். இவ்வகம் பற்றிய இலக்கணம் ஒரு நாடகம் போன்று அமையினும், தமிழர் பெரும்பாலும் மேற்கொண்டு வாழ்ந்த வாழ்க்கையே இது என்பதில் ஐயமில்லை.

இந்த அக வாழ்வைக் களவு, கற்பு என இருவகையாகப் பிரிப்பர் புலவர். இவ்வக வாழ்வு ஆய்ந்து காணின், தலைவனும் தலைவியும் கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றித் தாமே தமியராய் ஒருவரை ஒருவர் கண்டு, கருத்தழிந்து, தம்முட்கூடி, பின் களவு வெளிப்பட்ட வழி மணந்து வாழ்க்கை நடத்துவதில் முடிகின்றது. அப்படி ஒருவருக்கும் புலனாகமல் இருவரும் கூடி மகிழும் இன்பத்தைத்தான் 'அகம்' என்று அனைவரும் பாராட்டுகின்றனர். களவின் வெளிப்படை கற்பாக மாறுகின்றது. அக்கற்பு வாழ்க்கை மற்றவர் மாட்டும் பற்றிச் செல்லலின், அகவாழ்வு அத்துணைச் சிறப்பாக அமையவில்லை என்பது தெளிவு. அந்தக் களவு வாழ்வை அகப்பொரு ளாசிரியர்கள் நெடுங்காலம் நீட்டிக்க விடவில்லை. 'திங்கள் இரண்டின் அகமென மொழிப' என்று அந்தக் களவு வாழ்வை வரையறுத்து விட்டார்கள். அவ்விரண்டு திங்களில் தலைவன் தலைவி இருவரும் பலமுறை கூடுகின்றனர். யாருக்கும் புலனாகாது என்றாலும், சில நாள்களில் தலைவனின் உயிர்ப்பாங்கனுக்கும் தலைவியின் உயிர்த்தோழிக்கும் அது புலனாகித் தோன்றி நிற்கும். அவர்கள் அறிந்த வழியும் அது களவாகவே இருக்கும், ஏனெனில், இருவரும் தலைவன் தலைவியரது உயிர் போன்று வாழ்ந்து, அவர்க்கு வரும் துன்பத்தைத் தம்மதாகக் கண்டு