பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமும் புறமும்

241


 கருத்தழிவாராதலின். எனவே வெளிப்படுவ தென்பதை, அவர்களது எல்லை தாண்டி மற்றவர்கள் அறிவது என்றுதான் ஆசிரியர்கள் கூறுவார்கள், இது நிற்க.

இப்படிக் கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றித் தாமே தமியராய் நின்று, ஒருவரை ஒருவர் காதல்கொண்டு கலந்து, பின் ஒரு வேளை பிரிந்துவிடுவராயின் என்னாவது என்ற ஐயம் நிகழுமன்றே! அந்த ஐயம் நிகழா வழியிலேதான் தலைவன்: தலைவி என்ற இருவர்தம் பண்புகளையும் தெள்ளத்தெளிய எடுத்துக் காட்டுகின்றார்கள் புலவர்கள். வாய்மையும் மரபும் காத்த வளமார்ந்த மரபு அவர்கள் இருவருடைய மரபுகளும். அவர்கள் கொண்ட அன்பும் எக்காலத்தும் நீக்க முடியாத அன்பு. எக்காலத்தும் என்றால் இப்பிறவியில் மட்டுமன்றி, எந்தப்; பிறவியிலேயும் நீங்காது பின்னிப் பிணைந்து செல்லும் அன்பாகும். இந்த உண்மையை ஆசிரியர் திருவள்ளுவனார்.

"இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனானுக்
கண்ணிறை நீர்கொண்டனள்"

(குறள்: 1315)

என்று அழகாகக் காட்டுகின்றார். தலைவன், 'இந்தப் பிறப்பில் உன்னை விட்டுப் பிரியேன், என்கிறான், அதைக்கேட்டு மகிழ வேண்டிய தலைவி வருந்திக் கண்ணீர் உகுக்கின்றாள். காரணம் என்ன? அப்போது மறுமையிலும் அடுத்து வருகின்ற பிறவிகளிலும் தன்னைத் த்லைவன் மறந்துவிடுவானோ என்ற அச்சம் எழுகின்றது அவள் உள்ளத்தில். அவ்வச்சத்தின் ஆற்றாமையால் கண்ணீர் பெருகுகின்றது. இவ்வாறு அவர்தம் காதல் வாழ்வு எக்காலத்தும் எதனாலும் பிரிக்க முடியாதது. இவற்றை யெல்லாம் கருத்தில் இருத்தித்தான் இந்த நூற்றாண்டின் கவிஞர் பாரதியார், காதல் வாழ்வை,

"நேற்றுமுன் னாளில் வந்த உறவன்றடி-மிக
நெடும்பண்டைக் காலமுதல் நேர்ந்துவந்ததாம்."

என்று 'கண்ணம்மா-என் காதலி' என்னும் பகுதியில் எளிமையில் எடுத்துக் காட்டுகின்றார்,