பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

கவிதையும் வாழ்க்கையும்


எனினும், எக்காலத்திலும் நன்மைக்கு மாறான தீமை இருப்பது இயல்புதானே? அதுபோன்றே காதல் வாழ்விலும் சொல் தவறுதலும், கைவிடுதலும் நேர்ந்திருக்கும் போலும்! தாமே எதிர்ப்பட்டு, உடன்பட்டுக் களவிலும் கற்பிலும் பிரியாது வாழ்ந்த காதன் மக்கள் தமிழ்நாட்டில் மிகு பழங் காலந் தொட்டு வாழ்ந்துவந்த அந்த நெறியிலே, சிற்சில பொய்யும் வழுக்கலும் தோன்றின என்று எண்ண இடமுண்டு. கொடுப்போர் இன்றியும் அடுப்போர் இன்றியும் தலைவனும் தலைவியும் களவில் கைப்பிடித்து, பின் காதல் வாழ்வு வாழ்ந்த காலத்திலும் சில சடங்குகள் கற்பொழுக்கத்தில் தலை காட்ட ஆரம்பித்தன. அச் சடங்குகளும் கொடுப்போர் அடுப்போர் இல்லாமலே நடைபெற்றிருக்கலாம். இன்று பதிவு மணம் நடைபெறும் வழியில் யாரேனும் இருவர் தக்கார் முன்னிலையில் தம் வாழ்க்கை ஒப்பந்தத்தை அவர்கள் வரையறுத்துக் கொண்டிருக்கலாம். அன்றிப் பெற்றோர் கொடுப்பக் கொள்வதும் உண்டுபோலும் நாட்டில் பலரும் அறிய, மணமுர சொலித்து, உயர்ந்தோர் பலர் சடங் காற்ற. பெண்ணின் பெற்றோர் மகளைக் காளையாம் மைந்தனுக்குக் கொடுக்கின்ற சடங்குகளும், அக்காலத்திலே வளர்ந்து வந்திருக்கவேண்டும். அதற்கு ஆசிரியர் காட்டும் காரணம் நோக்கத்தக்கது.

காதல் மணத்தில்-அக வாழ்வில்-பொய்யும் வழுவும் புக்கன இல்லை என்றால், யாதொரு சடங்கும் தேவையில்லை. ஆனால், அப்பொய்-வழு-புகுந்து, நம்பிய நங்கையைத் தலைவன் கைவிட நேரின் என்னாவது? அவள் நைந்து இறப்பதன்றி, வேறு செய்வது என்? எனவேதான் கைவிடலாகாத வகையில் பலர் முன்னிலையில் அறிஞர்கள் பல சடங்குகளை உண்டாக்கி வைத்தார்கள்.

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (தொல் பொருள்: 143)

என்கிறார் தொல்காப்பியர். கரணங்கள் முன்னரே நாட்டில் வாழ்ந்தன அல்ல. அவை பின்னால் காரண காரியங்களுடன்