பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமும் புறமும்

245


 பொருந்தாக் காமமுமாய் அமைகின்றமையின், இவை அகப் பொருளுக்கு அத்துணைச் சிறப்பினவாக அமையா. புறம் பற்றிப் பேசுகின்றவர்கள், இந்த ஏழு அகத்திணைகளையும் கருதிப் புறத்திணையையும், ஏழாக அமைத்தார்கள். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனப் பகுக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியப் புறத்திணையியலில் இவ்வேழைப் பற்றியும் விளக்கங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அகப்பொருட்டிணையின் இன்னின்னவற்றிற்குப் புறன் எனவும், அவை அவ்வாறு எப்படிப் புறனாய் அமைந்தன எனவும் உரை யாசிரியர் நன்கு விளக்கியுள்ளார். ஒவ்வொரு புறத்திணையின் செயலும், ஒழுக்கங்களும் அவ்வவ்வகத்துறையினுக்கு அமைந்த செயலும் ஒழுக்கமும் ஒத்து அமைந்து செல்கின்றன வாயினமையின், அவை அவற்றின் புறமாயின என்று காட்டுவர் அவர். அவ்வாறு அவற்றைப் பகுத்து அறிந்துகொள்ளுதல் அனைவருக்கும் எளிதன்று. அன்பைப் பற்றி 'அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர்' என்று நூலாசிரியர் கூறியதையும் காட்டுகின்றார். எனவே, ஆய்ந்து அமைந்து நின்றா லன்றி, இவற்றின் பொருத்தம் விளங்கித் தோன்ருது என்பது அறிந்தோம். இவற்றின் பொருத்தத்தை உரையாசிரியர் கூறியபடி அறியின் அகம், புறம் இரண்டின் பொருத்தம் பற்றியும் நன்கு அறிந்து கொள்ள இயலுமாதலின், அவ்வுரைகளை அப்படியே தருகின்றேன்.

களவொழுக்கமும், கங்குல் காலமும், காவலர் கடுகினும் தான் கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீடலும் போல்வன ஒத்தலின், வெட்சி குறிஞ்சிக்குப் புறன் என்றார். வெட்சித் திணையாவது களவின்கண் நிரை கொள்ளும் ஒழுக்கம். இதற்கு அப்பூச் சூடுதலும் உரித்தெனக் கொள்க.

'முதல் எனப்பட்ட காடுறை உலகமும், கார் காலமும், அந்நிலத்திற்கேற்ற கருப்பொருளும், அரசன் பாசறைக்கண் தலைவியைப் பிரிந்து இருத்தலும், அவன் தலைவி அவனைப் பிரிந்து மனைவியின் இருத்தலும் ஆகிய உரிப் பொருளும் ஒப்புச் சேறலின், வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று. வெஞ்சுடர்