பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமும் புறமும்

249


 தமிழர் புறவாழ்வில் என்னென்ன பொருள்கள் பேசப்படுகின்றன என்பதைத் தொகுத்துக் கண்டோம். அவற்றுள் ஒரு சிலவற்றை விளக்கமாகக் காணல் வேண்டும். போர் மட்டும் குறிப்பது புறமாகாது. புறத்திணையினுள் கடவுள் நெறியும், அற வாழ்வும் பொருளின் தேவையும் பேசப்படுகின்றன. பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லையாதலால், அப்பொருளைப் பற்றிய விளக்கமே அதிகமாய் உள்ளது. பொருள் காரணமாகவும், பொருள் சார்ந்த நிலம் நாடு பிற காரணமாகவுமே, நாட்டிலும் உலகிலும் பல போர்கள் நடப்பதைக் காண்கின்றோம். இதே நிலைதான் தமிழ் நாட்டிலும். மன்னர் களும் குறுநில வேந்தர்களும் தத்தம் வாழ்வையும், வளத் தையும்.பெருக்க வேண்டுமென்று நினைப்பார்கள்; அதன்வழிச் செயலாற்றவும் தொடங்குவார்கள்: அதற்கு வழியாகப் பகைவர்தம் ஊர்ப்புறத்துள்ள பசுக்களை மடக்குவார்கள். அதையே வெட்சி என்றார்கள். பிறகு போர் தொடங்கும். அப்போது பகைவர்தம் நாட்டைக் கைக்கொள்ள வழி வகை ஏற்படும் நிலையையே வஞ்சி என்றார்கள். அவ்வாறு மாற்றாரை ஆற்றல் அழிக்குமுன் அவர்தம் மதிலைக் கடந்தாக வேண்டும். அம்மதிலைப் பற்றி நடக்கும் போரே உழிஞையாயிற்று. பின்பு போர்க்களத்திலே ஒருவரோடொருவர் எதிர் நின்று செய்யும் போரே தும்பையாகச் சிறந்தது. இவைகளே போர்க்கு முக்கியமான நான்கு திணைகள்: அகப்பொருளுக்கு முக்கியமான நால்வகைத் திணைகளுக்குப்புறமான நான்கு திணைகள். இவை, தவிர மற்றவையெல்லாம், இவற்றைச் சார்ந்தும், அறம், வீடு ஆகிய பிறவற்றைப் பற்றியும் விளக்கிக்கொண்டே செல்லுகின்றன.

போரைப் பற்றி இத்துணை விளக்கம் வேண்டுமா? புறத்திணைகள் ஏழனுள் நான்கு இதற்கு ஒதுக்கப் பெறுவானேன்? போர் பொருள் பற்றித் தோன்றுவதொன்று என்பதை நாம் மேலே கண்டோம். அப்பொருளே இவ்வுலக வாழ்வின் அச்சாணி என்பதை மறுப்பார் யார்?

க.வா.-16