பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

கவிதையும் வாழ்க்கையும்



பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்

(குறள். 751)

என்ற வள்ளுவர் வாய்மொழிப்படி, அனைத்தும் உலகில் பொருளால் ஆக்கம் பெறும். பொருள் இருந்தால்தான் அறமாற்ற முடியும்; அவாவிய இன்பம் துய்க்க வழி ஏற்படும்: பின் வாழ்வாங்கு வாழ்ந்து வான் உறையும் தெய்வத்துச் சேர்க்கப் பெறுதலும் கூடும். எனவே, பொருள் பற்றியும் அப் பொருள்பற்றி எழும் போர் பற்றியும், புறத்தில் அதிகமாககக் கூறுதல் தவறன்று. வள்ளுவர் அறத்துப்பாலும் காமத்துப்பாலும் அளவிற் சிறியனவாக, பொருட்பாலை நூலின் பாதி அளவுக்கு மேலாக்கிய காரணமும் இதுவே. பொருள் வழிப் பிறக்கும் போரின் அறத்தைக் குறிக்கும் நூலாகிய 'பகவற் கீதை'தானே இன்று பாரதத்தில் நன்கு போற்றப் படுகின்றது? ஆகவே, போர்பற்றி இத்துணை விரிவு தேவையே. அதிலும், வெறும் போர் விளக்கமோ, அன்றிப் போர்வெறியோ பற்றிக் கூறாது, அப்போராற்றும் நல்ல வழித்துறைகளையும், அவற்றை அறத்தாற்றில் ஆற்றவேண்டிய அமைதியினையும், போராற்றுங்கால் புவி மன்னரும் அவர் படையும் காக்க வேண்டிய நல்ல அறநெறிகளையும், மாற்று வேந்தன் அறத்தாறு வழுவி அவலம் புரிந்த வழி ஆற்றவேண்டிய செயல்களையும், விளக்கமாகப் புறம் எடுத்துக் காட்டுகிறது; இன்னும் மக்கள் வாழ்வில் புரியும் நலங்கேடுகளையும் பிறவற்றையும் விளக்கிக் காட்டுகின்றது. அவற்றையெல்லாம் பின் இலக்கியங்கள் வழிக் காணலாம் என்ற அமைவில், இங்கு இந்த அளவோடு நிறுத்திக் கொள்ளலாம்.

பொருளும் போருமன்றிப் புறத்தில் அறம் பற்றியும் கடவுள் நெறி பற்றியும் அவற்றின் வழி வீடுபெறும் நலம் பற்றியுங்கூடக் கூறப்பட்டுள்ளன. அகப் பொருளில் கருப்பொருள்கள்ைப் பற்றிக் கூறும்போது, ஆசிரியர் அவ்வத் திணை நிலங்கட்குத் தெய்வமாக மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்ற நால்வரைக் குறிக்கின்றார். ஆயினும், புறத்திலே "கடவுள் வாழ்த்து' என்ற ஒன்று நாட்டில் நிலை பெற்றிருப்பதைக் காட்டி, அது வரும் வழியையும் காட்டுகின்றார்.