பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வொடு பிணைந்த கவிதை

263


 இப்பொருள்கள் பேசப்படுகின்றன. உயர்குலத்தார் என்று பேசப் படுவர்கள்கூட இத்தகைய கள்ளையும் கறியையும் உண்டதாக அறிகின்றோம். அந்தணர் குலத்தில் பிறந்த கபிலர் பாடல்களில் இந்த உண்மை பொதிந்திருப்பதை அறிஞர் ஆதாரங் காட்டுவர். இப்படி வடநாட்டிலும் தென்னாட்டிலும் இக் கள் குடித்தல் சிறந்த காப்பியங்களிலும் கவிதைகளிலுங்கூடச் சிறப்பாகப் பேசப்படுகிறது. அது தவறு என்று அறநூல்கள் கண்டித்த போதிலும், மக்கள் வாழ்வில் நீங்கா இடம் பெற்று விட்டது. தன் நிலை மறந்து மறச்செயல் புரியத் தூண்டும் கொடுமை பற்றி அறநூல்கள் அதை நீக்கக் கூறினும், வாழ்வில் அது நிலைத்த இடம் பெற்றுவிட்டது. அதை நினைத்துத்தானே என்னவோ, இக்காலத்தில் 'பெர்மிட்டு' முறை வழங்குவது போன்று, வள்ளுவரும் 'உணின் உண்க' எனக் கூறிவிட்டார் என்று நினைக்கவேண்டி யிருக்கிறது.

மது அருந்துவது மக்கள் வாழ்க்கையில் ஒன்றியது என அறிந்தும், அரசாங்கம் அதைத் தடுக்க நினைக்கின்றது. அதன், பயன் கள்ளத்தனம் நாட்டில் வளர்ந்துவிட்டது. அரசாங்கம் எத்தனையோ வகையில் அக் கள்ள மதுவைத் தடுக்க முயல்கின்றது. எனினும், பயனில்லை. கள்ள மதுவின் கணக்கு வளர்ந்து கொண்டேதான் போகிறது. அரசாங்கம் எத்தனையோ பேரைச் சிறைசெய்து நாட்டைச் சீராக்க நினைக்கிறது. ஆனால், நாட்டில் அந்தக் கொடுமை வளர்ந்து கொண்டேதான் செல்கிறது. அரசாங்கம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. எனினும், பயன் இல்லை. மக்களுள் பெரும்பாலார் உள்ளத்தில் ஊறிய ஒன்றாகிய அதை. அரசாங்கத்தால் நீக்க முடியாது. இன்று மட்டுமன்றி, எத்தனையோ காலங்களில், எத்தனையோ அரசாங்கங்கள் மதுவை நீக்க நினைந்திருக்கும்; முயற்சி செய்து சட்டமும் தீட்டியிருக்கும்; ஆனால், மக்கள் மனநிலை அவற்றிற்கு இடம் கொடாமையின், மறுபடியும் சட்டத்தை மாற்றியிருக்கும். மக்கள், தங்கள் வாழ்வுக்கு அது தேவை இல்லையென்று தாங்களே கருதி நீக்கும் வரையில் சட்டம் பயன் தாராது.