பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வொடு பிணைந்த கவிதை

267


 அமைத்த குடிலில் இருப்பதும், கம்பர் சீதையைத் தமிழ் நாட்டுப் பெண்ணாகக் காட்டிய சிறப்பு அல்லவோ? “கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்? என்பதன்றோ தமிழர் வாழ்க்கை நெறி? அதை விட்டு, இராவணன் அவளை அடைய நினைத்ததையே ஏன் தடுக்கவில்லை?" என்று கேட்கலாம். அப்படிக் கதையை மாற்றின், இராமாயணமே இல்லையே! பிறகு போரும் பிறவும் எங்கே? வால்மீகியார் இராவணன் சீதையை இடுப்பில் கைகொடுத்துத் தூக்கிச் சென்றான் என்கின்றார். கம்பரோ, "மண்ணோடும் கொண்டு போனான் என்கின்றார்; பின்பு, 'உம்பி, புல்லினால் தொடுத்த தூய சாலையில் இருந்தாள்’ என்கின்றார்: இவ்வாறு வாழ்வின் அடிப்படைத் தத்துவத்தின்வழிக் கதையைத் தமிழ்நாட்டு முறைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டார். அவற்றைப் பற்றி விரிவாகப் பின்னர்க் காண்போம். இவ்வாறு வடநாட்டுக் கதையான போதிலும், கவிஞர் தம் உள்ளத்தால் அளந்து, தாம் வாழும் நாட்டுக்கு ஏற்ப, அதில் வாழும் மக்களுக்கு ஏற்ப, தம் கவிதையை ஆக்கிக் கொண்டமை யினாலேதான் அது வாழ்கின்றது. அது வேண்டா என்ற எதிர்ப்புத் தோன்றிய காலத்தில் தேய்வதற்கு மாறாகச் சிறந்து வளர்ந்து, பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பெறுகின்றது. இந்த நிலை, வாழும் எல்லாக் கவிதைகளுக்கும் பொருந்தும். ஆகவே, கவிதையும் வாழ்க்கையும் இரு கண்போன்று ஒரே குறிக்கோள் உடையன எனலாம்.

ஆனல், அதே சமயத்தில் மற்றொன்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நாட்டில் தோன்றிய எத்தனையோ கவிதைகள், இலக்கியங்கள், கற்பனைப்பெட்டகங்கள் வேண்டா என்று பிரசாரம் செய்வார் இன்றியே அழிந்து ஒழிந்து விட்டன என்பதையும் காணல் நன்று. ஆயிரமாயிரம் ஆண்டுகளாயினும், சில கவிதைகள் சாகா வரம் பெற்றுச் சிறக்க, சென்ற நூற்றாண்டிலே தோன்றிய எண்ணற்ற இலக்கியங்கள் இப்படிக் கேட்பாரற்று மாய்ந்தொழிவானேன்? காரணம், மேற்கண்ட ஒன்றேதான். அதுதான் அந்தக் காவியங்களும் கவிதைகளும், வாழ்வோடு தொடர்பு கொள்ளாமை. அந்த