பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

2. பத்துப்பாட்டு


லக இலக்கியங்களில் வாழ்வொடு பிணைந்த காவியங்கள் பல. வாழ்வொடு இயைந்த கவிதைகள் வாழும் கவிதைகளாகும். அந்த வரிசையில் நம் தமிழ்நாட்டுக் கவிதைகள் எவ்வாறு அமைகின்றன என்பதைக் கண்டு முடிப்போம். இன்றைய தமிழ் உலகில் எத்தனையோ இலக்கியங்கள் உள்ளன. கவிதைகள் பல வாழ்கின்றன. சங்க காலத்துக்குமுன் பலப் பல கவிதைகள் வாழ்ந்தனவென்றும், அவற்றுள் பல கடல் கோளுக்கு உட்பட்டு அழிந்துவிட்டன என்றும் அறிகின்ருேம். எனவே, இன்று நம்மிடை வாழும் கவிதைத் தொகுதிகளில் மிகப் பழையன கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்டவையே. கடைச்சங்க காலம் என்பது. இன்றைக்கும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர் ஆராய்ச்சியாளர். அக்காலத்தில் பல்வேறு இலக்கியங்கள் நாட்டில் தோன்றின. தோன்றிய அனைத்தும் இன்று வாழ்கின்றன என்று கூற முடியாது. வாழ்வொடு தொடர்பற்ற பல மாய்ந்துவிட்டிருக்கலாம். தொடர்பு கொண்டு என்றும் வாழவேண்டிய இலக்கியங்களில் சிலவும் கடல்கோளாலும், செல், நெருப்பு முதலியவற்றாலும் அழிக்கப்பட்டிருக்கலாம். எப்படியாயினும், நாம் இன்று வாழ்கின்ற இலக்கியங்களைக் கொண்டு—என்றும் வாழ்கின்ற இலக்கியங்களைக் கொண்டே—அவை வாழ்வொடு எவ்வாறு பின்னிப் பிரியாது வாழ்கின்றன என்பதைக் காணலாம்.

சங்ககாலத்திலும் அதை ஒட்டிய காலங்களிலும் தோன்றிய இலக்கியங்களை அறிஞர் சில தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். அவை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என்பன. அவற்றை ஒட்டி எழுந்த