பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

கவிதையும் வாழ்க்கையும்



லாம் இங்கு நம் ஆய்வுக்குத் தேவை இல்லையானமையின், அவற்றின் பெயர்களை மட்டும் சொல்லி மேலே செல்லலாம். "இலக்கணக் கொத்து', 'இலக்கண விளக்கம்', 'பிரயோக விவேகம் போன்ற நூல்களே அவை. அவற்றின் ஆசிரியர்களும் கற்றுத் துறையோகியவர்களே. எனினும், அவர்தம் நூல்கள் வாழாமைக்குக் காரணம், அவர்கள் தமிழர்தம் இலக்கண நெறி தவறி, நெறியில்லா நெறி சென்றமைதான் என்று கூறி அமைவோம். இவற்றினால் வாழ்வொடு பொருந்திய கவிதை என்றென்றும் சிரஞ்சீவியாக வாழும் என்பது தேற்றம்.

இதுகாறும் கூறியவற்றால், கவிதை வாழ்வொடு தொடர்புபட்டே அமையவேண்டும் என்பதும், அக் கவிதை, ஆசிரியர் உள்ள அமைதியையும் கொண்ட பொருளையும் பற்றி அமைவது என்பதும், அவ்வாறு வாழ்வொடு தொடர்புற்ற கவிதைகள் சாகா வரம் பெற்று என்றென்றும் வாழும் என்பதும், அவற்றைப் போக்க வேண்டுமென்று பலர் நாட்டில் முயன்றாலும், அவை வளர்ச்சி பெற்று ஓங்குமேயன்றித் தாழ்ச்சி யுற்றுச் சாகா என்பதும், இன்றைய உலகில் பிற நாட்டுப் பெரு நூல்கள் மொழிபெயர்ப்பு இலக்கியங்களாய் வளர்ந்துள்ளன என்பதும், அவையும் அவ்வந் நாட்டு நிலைக்கேற்ப மொழி பெயர்த்தால்தான் வாழும் என்பதும், கவிதை மட்டுமன்றி மற்ற எப்பொருளும் வாழ்வொடு பொருந்தின் அதை யாராலும் என்றும் அழிக்க முடியாது என்பதும், அதைச் சட்டத்தால் அன்றி வேறு வகையால் அடக்கினாலும், பின்னொருகால் பிழைத்துத் தழைக்கும் என்பதும், மொழிபெயர்ப்பில் நாட்டுப் பண்புக்கு அமையும் நல்ல நூல்கள் வாழும் என்பதும், அதற்குக் கம்பராமாயணம் சான்று என்பதும், அதே வேளையில் நாட்டுப் பண்புக்கு மாறுபட்ட இலக்கியங்கள் பிரசாரம் இல்லாமலே மாயும் என்பதும், அதற்குத் தலபுராணங்களே சான்று என்பதும், இந்நீதி இலக்கியத்துக்கு மட்டுமன்றி இலக்கணத்துக்கும் பொருந்தும் என்பதும் அறிந்தோம். இனி அவ்வாறு வாழ்வொடு பின்னிய கவிதைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் காண்போம்.