பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வொடு பிணைந்த கவிதை

271


என் செய்வது? உள்ளதை உள்ளபடி ஆய்ந்து எழுதுவதுதானே ஆய்வு? இவ்வாறே கம்பராமாயணத்தைப் பற்றி மேலே காட்டியபோதும் சிலர் தூற்றலுக்கு ஆளாக வேண்டுவதுதான். ஒன்றின் நலங்கேடுகளை ஆராயுங்கால் இவற்றை எதிர்பார்த்தே தான் பணியாற்ற வேண்டும் என்ற நினைவோடு மேலே செல்லலாம். வாழ்வோடு தொடர்பு கொள்ளாத எந்த இலக்கியமாயினும், இந்த நிலையினைப் பெறத்தான் வேண்டும். வரலாறு தோன்றிய நாள்தொட்டு, எம் மொழியில் இலக்கியம் தோன்றினும், அவை வாழ்வோடு பொருந்தின் வாழும்; அன்றேல், இவற்றின் முடிவுதான் எதற்கும். இலக்கியத்திற்கு மட்டுமன்றி, இலக்கணத்துக்கும் இவ்வித நிலை பொருந்துவதாகும்.

தமிழ் நாட்டுப் பழம்பேரிலக்கணம் தொல்காப்பியம். அதன் காலத்தை ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னதெனக் கணிப்பர் ஆய்வாளர். ஆனால், அது இன்று தமிழ் நாட்டில் வாழும் அளவுக்குப் பிற இலக்கணங்கள் வாழ்கின்றனவா? தொல்காப்பியத்துக்கு அடுத்த நிலையில் வாழ்வது பவணந்தியின் நன்னூல் என்னும் இலக்கணம். இவை இரண்டும் தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் அறியப்படுகின்றன. ஏன் அப்படி? தமிழர்தம் பண்பும் மரபும் காட்டும் இலக்கணம் தொல்காப்பியம் என்பதை, மேல் பலவகையில் கண்டிருக்கின்றோம். ஆகவே, அது வாழ்கின்றது. அதைப் போன்றே அதன் அடி ஒன்றி, நிலை கெடா வகையில் நன்னூல் செல்கின்றமையின், அதுவும் வாழ்கின்றது. ஆனால், இன்னும் சில இலக்கண நூல்கள் உள்ளன. அவற்றின் பெயர்கள்கூடப் பலருக்குத் தெரியா. தமிழைப் படித்துப் பட்டம் பெற்றவர்கள்கூட, ‘அப்படி ஒரு நூல் உண்டா?’ என்று கேட்பார்கள். அவை அத்துணை அழிவு பெற்றுவிட்டன. ஆனால், அவை மிகவும் அண்மையிலேதான் தோன்றின; தொல்காப்பியமும் நன்னூலும் தோன்றி நெடுங்காலம் கழிந்த பிறகே தோன்றின. இருந்தும், அவை வாழவில்லை. காரணம், அவை தமிழர் நெறிமுறை, வாழ்க்கை அனைத்தினுக்கும் அப்பாற்பட்டுத் தம்போக்கில் செல்லுவதேயாம். தலபுராணங்களுக்குப் பொருந்திய காரணங்கள் இவற்றிற்கும் பொருந்தும். அந்த விரிவெல்