பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

கவிதையும் வாழ்க்கையும்



ஒறுத்தலே தண்டம் என்னும் கொடிய விதியை அமைத்து, அதனால் எத்தகைய தவறும் மனிதன் இழைக்காமல் பார்த்துக் கொள்ளும் தமிழ்ச் சமுதாயத்தினிடத்தில், 'தவறு இழைக்கலாம்; எத்தகைய கொடுமையாயினும் தவறில்லை. ஆனால், உடனே அருகில் உள்ள குளத்தில் மூழ்கினாலோ, அல்லது அந்த ஊரில் பிறந்தாலோ, எல்லாத் தவறும் இல்லையாகிவிடும்,' என்று சொன்னால், அச் சமுதாயம் எப்படி இதை ஏற்றுக் கொள்ளும்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளின்மீது விருப்போ, அன்றி அளவு மீறிய ஆசையோ இருக்கலாம். அதைவிட உலகில் உயர்ந்த ஒன்று இல்லை என்றுகூட முடிவு கட்டிவிடலாம். அதனல் அதை மற்றவர்கள் ஒப்புக் கொள்வார்களா? அவர்கள் கூறுவது சரிதானனா என்று எண்ண மாட்டார்களா? எண்ணி வாழ்வோடு பொருந்தியதாயின் கொள்ளு வார்கள்; இல்லையானல் தள்ளுவார்கள். 'தீர்த்தம் என்பது சிவகங்கையே. இதில் மூழ்கினல் எல்லாப் பாவங்களும்-கொலைப்பாதகம் உட்படத்தான்-போகும்,' என்று சொன்னால், ஒரு நாட்டு மக்கள் அத்தகைய ஒன்றை நம்பியா வாழ்வார்கள்? அப்படி நம்பினாலோ, அனைவரும் கொலையாளராக மாறிவிடுவார்களே! இது எப்படி ஏற்றுக்கொள்ளக் கூடிய தாகும்? ஒவ்வொரு தலபுராணத்திலும் இப்படி எத்தனையோ காண முடியும். இந்த நிலையில் அவை வாழாது வீழ்ந்தொழிவதற்குப் பிரசாரம் தேவையோ? இல்லையே! சிறந்த கவிதைகளான காஞ்சிப் புராணம், தணிகைப் புராணம் போன்றவற்றின் நிலையே இதுவாயின், பிற புராணங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? இப்புராணங்களின் பேரை அறிவார் நாட்டில் எத்தனை பேர்? இதைப் படிக்கும் பலரும், இப்படியும் ஒரு புராணம் இருந்ததா?’ என்று கேட்பார்களேயன்றி, அது பற்றி முன்னம் அறிந்தவர் ஒரு சிலரே இருப்பர். இவ்விரண்டு புராணங்களையும் இயற்றிய ஆசிரியர், சிலரால் சிறந்தவர் என்று போற்றத் தக்கவராயினும், பெரும்பாலும் அவர்தம் கவிதைக்குத் தேர்ந்தெடுத்த பொருள் காரணமாக வாழ்வைப் பிறந்த நாட்டிலேயே இழந்துவிட்டார். இவ்வாறு கூறுவதால் சமயத் தலைவர் சிலர் மாறுபாட்டுக்கு நான் ஆளாகவேண்டி வரும்.