பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வொடு பிணைந்த கவிதை

269


 கலாம். வெளிக்கொணர்ந்த புலவர்தம் அன்பளிப்பாக அவை பிறர்க்கு வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவை மக்கள் மனத்தில் இடம் பெறவில்லையே! ஏன்? பலர் அவற்றைத் தொட்டுத் திறந்தும் படித்தும் இருக்கமாட்டார். அதற்கென ஒரு இயக்கம் தோன்றி, 'தலபுராணங்கள் நாட்டுக்குத் தேவையற்றன. அவற்றைச் சுட்டெரிக்க வேண்டும்' என்று பிரசாரம் செய்து எரித்ததாகவும் எங்கும் யாரும் கூறவில்லை. ஒருவரும் அதைத் தொடக்கூடாது என்று அரசாங்கச் சட்டமும் இல்லை. பின்பு ஏன் அத்தனைக் காவியங்களும், ஒரு நூற்றாண்டின் எல்லையைக்கூட வென்று வாழ முடியவில்லை? அவை எங்குத் தான் சென்றன? காவியப் புலவர் சிலர் செய்த வேறு சில நூல்கள்கூட ஓரளவு மூச்சுப்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்க, இந்தப் புராணங்கள் எப்படிப் போயின? கேள்விக்கும் வியப் புக்கும் பதில் ஒன்றே ஒன்றுதான். அதுதான் இவ்விலக்கியங்கள்-கவிதைகள்-தமிழ் நாட்டு வாழ்வோடு தொடர்பு கொள்ளாதவை என்பது.

தமிழர்தம் தூய வாழ்வு நெறிக்கு மாறுபட்டமையால்தான் தலபுராணங்கள் வாழவில்லை என்பது கண்டோம். தமிழர் தவறு இழைத்தலாகாது என்பது வாழ்க்கை நெறி. அப்படி அறியாது தவறு இழைப்பின், அதற்குக் கழுவாய் தன்னை ஒறுத்தல் என்பதுதான். பொற்கைப் பாண்டியன் தன் தவறு உணர்ந்து கையைக் குறைத்துக் கொண்டதும், மனுச் சோழன் தன் மகன் தவற்றுக்கு அவன் உயிரை வாங்கியதும் கதைகளாயினும், தமிழர் வாழ்வை விளக்க வருவன. இந்தச் சிறந்த வாழ்க்கை நெறிக்கு மாறாக எந்தக் கவிஞன்தான் தன் கவிதையை வாழவைக்க முடியும்? சிறந்ததாகிய காஞ்சிப் புராணத்தையே எடுத்துக் கொள்வோம். சிவஞான முனிவர் சிறந்த ஐம்புலன் ஒடுங்கிய அரும் பெருந்துறவியார்தாம்; நம் மதிப்புக்கு உரியவர்தாம். ஆனால், அவர் கவிதைக்கெனத் தேடியெடுத்த பொருள்தான் அவரை வாழ வைக்கவில்லை, கற்பனையிலும் கவிதை புனைவதிலும் அவர் சிறந்தவரே. எனினும், அவர் எடுத்துக்கொண்ட பொருள் மக்கள் வாழ்க்கைக்கு மாறுபட்ட பொருள். தவறிழைத்தால் தன்னை