பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டு

275


அவர்தம் வாழ்க்கையையும் காட்டிய காரணத்தினாலேதான் இத்துணை நாள் வாழ்கின்றன. மன்னர்தம் மாளிகை வாழ்வு மட்டும் இந்நூலில் இடம் பெறவில்லை; குன்றக் குறவர்தம் குடிசை வாழ்வும், வேட்டுவர் வாழ்வும், காட்டு வழியும், அந்தணர் இருக்கையும், பாலையின் வெம்மையும், மருத வைப்பும் அனைத்தும் பேசப்படுகின்றன. அவ்வப்பகுதியை நாம் பயிலும்போது, நாமே நம்மை மறந்து அவ்வந் நிலத்து வாழ்கின்றவராகவே அமையும் நிலை பெற்று விடுகின்ருேம். பத்துப் பாடல்களையும் ஒவ்வொன்றாகத் தனித்தனியே ஆராய்ந்து இக் காட்சிகளையெல்லாம் காணப்புகின், அதுவே ஒரு பெரு நூலாய் அமைந்துவிடுமாதலான், அவற்றுள் சிலவற்றை மட்டும் தொகுத்துக் கண்டு, இப்புலவர்கள் தங்கள் கவிதைகளை எவ்வாறு வாழ்வொடு பிணைத்துள்ளார்கள் என்பதை மட்டும் அறிந்து கொள்லோம்.

உண்மைக் கவிஞர்களுக்கு வேறு பொருள்களைக் காட்டிலும் முன்னே நிற்பது உலகந்தான். உலகத்தில் உள்ள மக்களும் பிறவும் நலம் பெற்று வாழ்வதுதான் அவர்தம் குறிக்கோளாய் அமைந்துள்ளது. எந்தப் பொருளைப்பற்றிப் பாடினும், மெய்க் கவிஞர்களின் கண்முன் தெரிவது உலகந்தான். தம் பாடற்குரியார் கடவுளராயினும், அரசராயினும், வேறு யாராயினும், அன்றி வேறு பொருளாயினும், அவர்கள் முதலில் உலகம் வாழ வேண்டும் என்றுதான் வாழ்த்துவார்கள். திருவள்ளுவனாரும் தம் பெருங்குறளை, 'ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்குவதை நாமறிவோம். அந்த உலகை நினைக்கும் போது, அவர்கட்கு மற்றொன்றும் நினைவுக்கு வரும். நாடு செழிக்க வேண்டுமானல், நல்ல மழை வேண்டுமன்றோ? ‘மழை இன்றி மாநிலத்தார்க் கில்லை’ என்பதும் ஒரு கவிஞன் சொன்னது தானே? அது என்றும் உண்மையான ஒன்று. இந்த இரண்டையும் பிணைத்துப் பத்துப்பாட்டில் கவிஞர்கள் அழகாகக் காட்டியுள்ளார்கள். மக்கள் வாழ உலகம் சிறக்கவேண்டும். உலகம் ஓங்க மழை பொழியவேண்டும். இக்கருத்தைக் கூறிய ஆசிரியர் தம் பாவின் அடிகளைக் காண்போம்,