பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

கவிதையும் வாழ்க்கையும்


கடவுளைப் பாடுகின்ற நக்கீரர், தம் திருமுருகாற்றுப் படையில் முருகனது ஆறுபடை வீடுகளைப் பற்றியும் பாடுகிறார். உலகம் மகிழ அவன் அருள் புரிவான் என்ற கருத்தடக்கி, கண்முன் காட்சியளிக்கும் காலை ஞாயிற்றினை உவமிக்கின்றார். அஞ் ஞாயிற்றின்வழி உல்கம் உண்டாயதென்பதையும், அந்த ஞாயிறு இன்றேல் உலக வாழ்வும் இல்லை என்பதையும் விஞ்ஞானிகள் காட்டிய வழியில் கண்டோம். எனவே நக்கீரர். உலகம் உவக்கும் நலம் புரப்பது ஞாயிறு என்பதை உணருகின்றார். ஞாயிற்றின் வழி மழை சுரந்து, இழுமென அருவி தோன்றும்; வெள்ளம் பெருக்கெடுத்தோடும்; அதன்வழி உலகம் வாழும். இத்தகைய நற் கருத்துக்களைக் கொண்டு தமது திருமுருகாற்றுப்படையின் தொடக்கத்தையே,

‘உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு’
(முரு. 1, 2)

என்று. உலகம் மகிழத் தோன்றும் கதிரவனை உவமையாகக் கூறிப் பின்,

'கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை .

வாள்போழ் விம்சுபில் வள்ளுறை சிதறி'
(முரு. 7, 8)

என்று மழையின் நிலையைக் காட்டி மேலே செல்கின்றார். இறுதியிலேயும் அம் மழைவழி வெள்ளம் பெருக்கெடுத்தோடி வருவதை,

‘ஆமா நல்ஏறு சிலைப்பச் சேண்நின்று

இழுமென இழி தரும் அருவி'
(முரு, 315, 16)

என்று காட்டி முடிக்கின்றார். இவ்வாறு கடவுளைப் பற்றிய பாட்டில் மட்டுமன்றி, பாண்டியனைப் பாடிய அந்த நெடுநல் வாடையின் தொடக்கத்திலும், புலவர் நக்கீரரே,

வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇப்

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
(நெடுநல், 1, 2)

என்று தொடங்கி, வானம் வையகத்தை வாழவைக்கப் புதுப் பெயலைத் தருகின்றது என்பதைக் காட்டுகின்றார்.