பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

கவிதையும் வாழ்க்கையும்



புகர்இணர் வேங்கை வீகண் டன்ன
அவரை வான்புழுக்கு அட்டிப் பயில்வுற்று
இன்சுவை மூரல்'

(பெரும். 192-196)

உணவாகத் தருவர். பின் மருத நிலத்தை நாடிச் சென்றாலோ, அந்நிலத்தில் உழவுத் தொழில் செய்து உலகை வாழ்விக்கும் உத்தம வேளாண்குடியில் தோன்றிய நல்லவர்கள். பசியென்பது இன்னதென்பதை அறியாத நல்ல வீடுகளில் வாழ்பவர்கள்,

"வினைஞர் தந்த வெண்ணல் வல்சி
மணவாழ் அளகின் வாட்டொடும்"

(பெரும். 255-256)

தருவார்கள். அஃதாவது, தம் கை வருந்தி வயலிடை உழைத்த பயனால் பெற்ற நல்ல வெள்ளிய அரிசிச் சோற்றுடன் பெட்டைக் கோழியின் பொரியலும் வைத்துத் தருவார்களாம். பின்னர் அவர்களைக் கடந்து கொடுமுடி வலைஞர்தம் குடியிடமாகிய நெய்தல்நிலத்தில் சென்றுசேரின், அவர்கள் கொழியலாலாகிய கூழினை வாய் விரிந்த தட்டிலே ஊற்றி ஆற்றி, புற்றின் உட்கிடக்கும் நல்ல முழைகளிலே அதை ஊறவைத்து, இரண்டு பகலும் இரண்டு இரவும் கழிந்து பார்த்து, பின் எடுத்து வார்க்கும் நல்ல கள்ளையும், நல்ல கறியாக்கிய மீனையும் கொடுப்பார்களாம். அதைக் கடந்து வழி நெடுகச் செல்லும்போது இன்னும் பலருடைய பழம்பதிகள் எதிர்ப்படுகின்றன. அவற்றுள் ஒன்று அந்தணர் உறை பதி. அவ்வந்தனரோ,

"பறவைப் பெயர்ப்படு வத்தம்
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி அளஇப் பைந்துணர்
நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைபட'

(பெரும். 305-310)

தருவார்கள்.