பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டு

291



தேர்ந்த முறையினைக் குறிப்பாகக் கூறலும் அறிந்து இன்புறத்தக்கன. தமிழர் வாழ்விலேயே இக் களவாகிய குறிஞ்சி ஒழுக்கந்தான்.பிற ஒழுக்கங்களுக்கு அடிப்படையா யமைவது' மற்றெவற்றினும் உயர்ந்ததாய், அனைத்துப் பொருளையும் அடக்கியதாய், வானுயர் தோற்றம் கொண்டுள்ள குறிஞ்சிநில மலைநலத்துக்கொப்ப அதில் நிகழும் இக்களவு வாழ்க்கையும் தமிழர்தம் பிற வாழ்வுக்கெல்லாம் சிகரமாய்ச் சிறந்து விளங்குகின்றது. அக்களவு வாழ்வின் ஒரு பகுதியாகிய 'களிறு தரு புணர்ச்சி'யே இங்குக் கபிலரால் காட்டப்படுகின்றது.

தனித்து விடப்பட்ட தோழியும் தலைவியும் திணைப்புனங் காத்துத் திரிதருங்கால் ஒரு களிறு அவரைத் துரத்தி வர, அதை விரட்டி வெற்றி கண்ட வீரனைத் தலைவி விரும்பிக் கூடும் நிலையே இது. இதன் வழி அவள் காதல் வாழ்வு தொடங்குகின்றது. அதை அறியாத அன்னையர், தலைவி மாற்றத்திற்கு வேலன் மூலம் வெறியாடி மருந்து நாடுகின்றனர். ஆனால், தோழியோ, உண்மையை உரைத்துத் தலைவனுக்கு அவளைத் தருமாறு வேண்டுகின்றாள். திணைப்புனத்துக்கு அனுப்பியவர் தாயரா தலான், தவறு அவர்பால தென்றும், வாய்மையும் மரபும், பிற பண்புகளுடன் யானையை வெல்லும் வீரமும் உடைய தலைவனையே தலைவி தேர்ந்தெடுத்ததால் அதில் தவறில்லை எனவும் தலைவியின் பக்கம் தோழி நின்று பேசுவது, நூல் வழி அறிந்து இன்புறற் பாலதாகும். மேலும், குறிஞ்சி நில இயற்கைப் பாகுபாடுகளையும், அந்நிலத்து வாழ் மக்கள் வழக்க ஒழுக்கங்களையும் கபிலர் காட்டும் திறன் சிறந்த ஒன்று. இதில் காட்டும் தலைவனது பெருந்தன்மை, தலைவி உள்ளம் அறியா முன் எட்டி நின்று, 'அறிந்தபின் அணைத்து வந்து காட்டிய தண்ணளி முதலியன அறியத் தக்கன. களவு மணத்தில் பிரிய நேர்ந்த தலைவி கலங்க,

'நேரிறை முன்கை பற்றி நுமர்தர
நாடறி நன்மனம் அயர்கம் சின்னான்
கலங்கல் ஓம்புமின் இலங்கிழையீர்!'

(குறிஞ்சி. 231-33)