பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டு

295


வந்துற்றதா’ என்ற ஐயம் எழலாம். ஆனால், உண்மை அதுவன்று. மதுரை இன்றும் நிலைத்தே வாழ்கின்றது. கரிகாலனை முன்னிறுத்திப் புகார் வாழ்வைக் காட்டினது போன்றே, இங்கும் பாண்டியன் நெடுஞ்செழியனை முன்னிறுத்தியும், அவனுக்கு நிலையாமை உணர்த்தும் நெறியை முன்னிறுத்தியும் மதுரை வாழ்வை விளக்குகின்ருர் மாங்குடி மருதனார். மாங்குடி மருதனார் புலவர் வரிசையில் முன்னிறுத்திப் போற்றப்பட்டவர்.

‘மாங்குடி மருதன் தலைவ னாகப்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை'

என்று பாண்டியன் நெடுஞ்செழியனாலேயே பாராட்டப் பெற்றவர். அவர்தம் பாடலே இம் மதுரைக் காஞ்சி. இப் பாடற்றொகுதியிலே இதுவே மிக நீளமான பாட்டு 782 அடிகளைக் கொண்டது. இதில் ஆசிரியர், நெடுஞ்செழியனது சிறப்பையும் வெற்றிகளையும் கூறி, அவனது மதுரைமா நகரின் நலத்தையெல்லாம் விளக்கி, அவன் முன்னேர் வாழ்ந்ததையும் கழிந்து ஒழிந்ததையும் காட்டி, நில்லா உலகத்து நிலைமையை விளக்கி, மேல் அவன் செய்ய வேண்டுவதைச் சொல்லுகின்றார். ‘உலகம் பொய்; அனைத்தும் பொய்; ஆகவே, அனைத்தையும் விட்டு நீங்கு,’ என்ற பொய்த் துறவைத் தமிழர் கற்பிக்கவில்லை என்பதை மேலே கண்டோம். அதே நிலைதான் இங்கேயும். நெடுஞ்செழியன் முன்னேரது வீரம்,கொடை, சிறப்பு, வாழ்க்கை வளன் அனைத்தையும்கூறி, 'அவ்வாறு வாழ்ந்தவர் திரையிடு மணலினும் பலரே காண்" என விளக்கி, அதனால், நீ அனைத்தையும் விட்டுத் துறவை மேற்கொள்வாயாக’ என மாங்குடி மருதனர் வற்புறுத்தவில்லை. அதற்கு மாறாக, இவ்வாறு நில்லா உலகில் நிலைபெறுமளவும், பெற்றது கொண்டு சுற்றம் அருத்தி, உற்றார் உறவினரோடு பொருந்தி, விருப்புறு மனைவியோடு காதல் வாழ்வில் திளைத்து வாழ்க! எனவே மருதனார் வலியுறுத்துகின்றார். இளமை தொடங்கிப் போர்த் தொழிலையே கொண்டு வாழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழியனே. அவ்வாறு போர்மேற்