பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

கவிதையும் வாழ்க்கையும்



இவ்வாறு மதுரைக் காஞ்சி, அன்றைய தமிழ் நாட்டிலும், தலைநகரங்களிலும் வாழ்ந்த மக்களது இடையறா இன்பவாழ்வையும், துன்பியல் நிலையுள்ளதேல் அதையும் காட்டி, அவற்றின் வழி அன்றைய தமிழர்தம் வாழ்க்கை முறையை நம்முன் காட்டுகின்றது. எனவே, இப் பத்துப்பாட்டுத் தொகுதி அக்கால வாழ்க்கை முறைகளைக் காட்டும் ஒரு கவிதைத் தொகுதி நூல் என்பது தேற்றம்.

இதுகாறும் கண்டவற்றால், சங்க காலத்தே தோன்றிய நூல்களுள், ‘பத்துப்பாட்டு’ என்னும் தொகுதி முதலில் வைத்து எண்ணத் தக்கதென்றும், அதில் அமைந்த பத்தும் இவை என்றும், அவை அகமும் புறமும் பொருந்த எவ்வாறு பாடப்படுகின்றனவென்றும், அரசரைப் பாடிய அந்த நூல்கள் மக்கள் வாழ்வைப் பின்னணியாக்கிக் கொண்டே ஆக்கப்பெற்றன வென்றும், தமிழர்தம் நாட்டு வாழ்க்கை, நகர வாழ்க்கை என்ற இரண்டையும், ஐந்திணை நிலவகையில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை வழியே எவ்வெவ்வாறு எடுத்துக் காட்டுகின்றன என்றும், அவற்றைக் காட்டுவதன்மூலம், இக் கவிதைகள் வாழ்வொடு பின்னிப் பிணைந்து எக்காலத்தும் வாழும் கவிதைகளாக நிலைபெற்று உள்ளன என்றும் கண்டோம். இனி, எட்டுத்தொகை நூல்களைக் காண்போம்.