பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டு

297


மேற்கண்டபடி, இந்நூல் அவனை மட்டும் பாடியிருப்பதாயின் அவனேடே மாய்ந்திருக்கும். அவனை முன்னிறுத்தி, அவனை நாட்டு ஐவகை நிலமக்கள் வாழ்வினையும், அவன் தலைநகராகிய மதுரைமாநகரின் மக்கள் வாழ்வினையும் நம்முன் கொண்டு வந்து வைப்பதாலேயே, அதுவும் வாழ்கின்றது. வையைக் கரையில் அம் மதுரைமா நகரின் விரிந்த சிறப்பையெல்லாம் இன்றும் காண்கின்றோம். இவ்வாறு ஏற்றம் பெற்ற ‘காவல்’ மாநகராக, இராப்பகல் என்ற வேறுபாடற்று விழாச் சிறந்த நகராக, வாணிக வளனும் பிற நலன்களும் பெற்ற பெருநகராக அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் விளங்கியது என்பதைக் காணத் தமிழர் உள்ளம் மகிழாதிருக்குமோ! மதுரைமா நகரம் பகற்காலத்தும் இராக்காலத்தும், யாமந்தொறும் எவ்வெவ்வாறு இருந்தது என்பதை அறிதல் நலம் பயப்பதாகும். மதுரைமா நகரின் ஒரு நாள் வாழ்க்கையை நம்முன் கொண்டுவந்து நிறுத்தி, அன்றைய தமிழ் மக்களின் நகர வாழ்வு இத்தகையது என்பதை மாங்குடி மருதனர் காட்டுகின்றார். தெருத்தொறும் செல்லும் தேரும், குதிரையும், யானையும், பிறவும் அவர்தம் செல்வ வாழ்க்கையை நமக்குக் காட்டுகின்றன. நகர மக்கள் ஆற்றும் பல்வேறு வினைகளைப் பற்றிய பட்டியலையே நம்முன் வைக்கின்றார் கவிஞர் நகரில் ஆடவரும் பெண்டிரும் அணி அணியாகப் பணியாற்றியும், பொழுதுபோக்கியும் தத்தம் வழியே வாழ்ந்து வருவதும் நம் கண்முன் தெரிகின்றது. திருக்கோயில்களின் சிறப்பும் அவற்றுள் மக்கள் வழிபாடாற்றும் முறையும் விளக்கப்படுகின்றன. காலை மாலையில் கடனாற்றும் அந்தணர். அறவோர்தம் செயல்கள் விளக்கம் பெறுகின்றன. இராக்காலத்தில், பேயும் உறங்கும் பேரிருள் யாமத்தும் ஊர்க்காப்பாளர் உறங்காராய்க் கண் இமையாராய்க் காவல் புரியும் செயலும் நம்முன் தெரிகின்றது. விடியல்வேளையில் இயல்பாக நிகழும் இயற்கை நிகழ்ச்சியும் மக்கள் செயலும் காட்டப்படுகின்றன. இவ்வாறு மதுரை மாநகரின் வாழ்க்கை அத்தனையுமே காட்டப்படுதலால் இது ஒரு வாழ்விலக்கியமேயாய் அமைகின்றதன்றோ!க.வா.—19