பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

கவிதையும் வாழ்க்கையும்


இவற்றால் பாராட்டப் பெறுவோரும் பல்லோர். அனைத்தும் அன்றைய தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டை விளக்குகின்றன. அகப்பாடல்களுள் பெரும்பாலன, தனி மனிதரைக் குறித்துப் பாடப்பட்டன அல்ல. அவை அக ஒழுக்கம்பற்றிய விளக்கங்களாகவே அமைந்துள்ளவை. ஐந்திணை ஒழுக்க வகைகள் தனித்தனியே விளக்கமாகப் பேசப்படுகின்றன. புலவர் சிலர், தம் பெயரையும் விரும்பாராய், நல்ல கவிதைகளை ஆக்கியிருக்கின்றனர். அவர்தம் கவிதையில் அமைந்த அழகிய பொருள் பொதிந்த தொடரைக் குறித்தே அவர் வழங்கப் பெறுகின்றனர். சில பாடல்கள் முற்றும் கிட்டவில்லை. சில பாடல்கள் இடையிடையே சிதைந்துள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் நானுாறு, ஐந்நூறு என்ற எண்ணிக்கையில் பாடல்கள் உள்ளன. பரிபாடலில் மட்டும் இருபத்திரண்டு பாடல்களே உள்ளன. பதிற்றுப்பத்தில் முதலும் ஈறும் அழிய, எஞ்சியவற்றுள் எண்பது பாடல்கள் உள்ளன. கலித்தொகை நூற்று ஐம்பது பாடல்கள் கொண்டது. ஐங்குறுநூற்றில் ஐந்நூறு பாடல்கள் உள்ளன. மற்றைய கற்றிணை, குறுங் தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நான்கு நூல்களும் தனித்தனி நானுாறு பாடல்களைக் கொண்டுள்ளன. இத்தகைய அரிய தொகுப்பு நூல்கள் யாரால் தொகுக்கப்பட்டன என்று கூற முடியாது. பெருந்தேவனார் இவ்வாறு பொருள்பற்றியும் அடிபற்றியும் பிற வகைபற்றியும் பாடல்களைப் பகுத்துப் பெயரிட்டு அவ்வவற்றிற்குக் கடவுள வாழ்த்தும் எழுதி நூல்களை அமைத்தார் என்பர்; சிலர் இதனை மறுப்பர். எப்படியாயினும், அனைத்தினும் ஆழ்ந்த அறிவும் பற்றும் கொண்ட ஒருவரே இவற்றைத் தொகுத்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.

இந் நூல்களுள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டோ, திணை வகைப் பாகுபாடு செய்தோ, வேறு வகையாகப் பிரித்தோ இவை, வாழ்வோடு தொடர்பு கொண்டதைக் காட்டிக்கொண்டே செல்லின், அது எல்லை யற்றதாக அமையும். மேலும், இத் தொகுதிவழி ஆராய்ந்து