பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டுத்தொகை

303


'பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும், மலைக்கவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே.'


'சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை.
நீருளே பிறப்பினும், நீர்க்கவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.'


'ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை,
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்?
சூழும்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.'

- (கலி. பாலை.8)

என்று காட்டும் உவமைகள் அழகியன அல்லவோ! மலையிடைப் பிறந்த சாந்தம் தன் மணத்தாலும் தண்மையாலும் மலையையா மகிழ்விக்கின்றது? தேய்ந்து நிலைகெடினும் எங்கோ தூரத்தே பயன்படுத்துவாருக்கன்றோ உதவுகின்றது? கடலில் பிறக்கும் முத்தம் அவ்வாறே கடலுக்கு உதவாது, அணிபவரை அழகு செய்யத்தானே உதவுகின்றது? யாழுள் பிறக்கும் இன்னிசை கேட்டு யாழா இன்புறுகின்றது? தூரத்தே கேட்பாரன்றோ மகிழ் வெய்துகின்றனர்? இந்த மூன்றையும் சொல்லிய பின்னும், தலைவியின் பிரிவைப்பற்றி விளக்கவும் வேண்டுமோ? எனினும், 'அவர், நும்மகள் நுமக்கும் ஆங்கனையள்' என்று விளக்குகின்றனர். அவள் வீட்டிலே பிறந்த தலைவி, யாருக்குப் பயன்பட வேண்டுமோ, அவனைச் சென்று அடைந்துவிட்டாள். இவ்வுண்மையைத் தெள்ளத்தெளிய அறிந்த செவிலி, மேலும் வருந்திக் கொண்டு செல்வாளோ? திரும்பி வந்துவிட்டாள். பிறகு தலைவன் தலைவியர்தம் திருமணம் நடைபெறுகின்றது. தலைவன் வீட்டிலோ, அன்றித் தலைவியின் பெற்றோர்கள் வேண்டுகோளினால் தலைவியின் வீட்டிலோ மணம் நடைபெறும். அம் மணம் அக்காலத்தில் எப்படி நடைபெற்றது என்பதை மற்றொரு நூலாகிய அகநானூறு விளக்குகின்றது.