பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

கவிதையும் வாழ்க்கையும்



‘உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப, நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்ற கவின்பெறு காலை;
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடி,
‘கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றோர் பெட்கும் பிணையை யாகெ’ன
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர,
ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல்' (அகம். 86)

என மணமுறையை நன்கு விளக்கிக்காட்டும் முறையில் அக்காலத் தமிழர் நாட்டில் கற்பெனும் வாழ்க்கை தொடங்கு முன் களவின் வழியோ, அன்றி வேறு நிலையிலோ நடந்த மணத்தில் இந்தச் சடங்குகள் இருந்தன என அறிகின்றோம். இச் சடங்குகள் பல இக்காலத்தில் உள்ளன போன்றே காண்கின்றன அல்லவா! இவ்வாறு மணம் புரிந்த தலைவன் தலைவியர் தம் வாழ்க்கையை விளக்கும் பாடல்களும் மிகப் பலவாம். அவற்றுள் சில காண்போம் :

காதன் மனையாளும் காதலனும் மாறின்றிக் கலந்து வாழும் வாழ்வே இன்ப வாழ்வு. கற்புநெறி அவ்வாழ்வைத் தான் காட்டுகின்றது. அவ்வாழ்வில் ஊடலும் கூடலும் கலந்துள்ளன. தலைவன் தலைவியரது உள்ள மகிழ்வைக் காட்டும்