பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டுத்தொகை

315


‘வாரா ராயினும் இரவலர் வேண்டித்
தேரிற் சென்று அவர்க்கு ஆர்பதம் நல்கும்'

நல்ல பண்புடைய அரசர்களைப்பற்றிப் பாடப்பெற்றுள்ள மையின், அவை வாழ்கின்றன. தனிப்பட்ட இவ்வரச வாழ்வை விளக்கும் பாடலே விட்டு, நாமும் புறநானூற்றுள் புகுவோம்.

புறநானூறு நானுாறு பாடல்களைக் கொண்டது. மன்னர் பலர் பாராட்டப்படுகின்றனர். பாடிய புலவரும் பல்லோர். அரசர்களைப் பாராட்டுவதன் மூலம் அவர்கள் அக்கால நாட்டு வழக்கங்களையே காட்டிவிடுகின்றார்கள். புலவர்தம் சொந்த வாழ்க்கை முறைகளே பல பாடல்களில் வருகின்றன. அந்த வாழ்க்கை வழியே, அக்கால மன்னரையும் மக்களையும் பற்றிய குறிப்புக்களும் வெளியாகின்றன. புலவர் எளிய வாழ்வில் வாழ்ந்தாலும், வறுமை எவ்வளவு வாட்டினாலும், அதனல் அவர்கள் தங்கள் கொள்கையில் பின்னடையாது தங்களை அவமதிப்பவர் யாவராயினும், அவரைத் தாங்கள் மதியாது சென்று விடுதல் மரபு என்பதையும் நூல்வழிக் காணலாம்.

பெருந்தலைச்சாத்தனர் சிறந்த புலவர். அவர் குமணனிடம் அளவற்ற பரிசில் பெற்று அவனைப் பாராட்டியுள்ளார். அவனிடத்தில் தமது வறுமையை உள்ளவாறே உணர்த்தவும் பின்னடையவில்லை. அதனல், பொதுவாகப் புலவர்தம் வறுமை வாழ்வையே அவர் காட்டிவிடுகின்றார்.

‘ஆடுநணி மறந்த கோடு உயர் அடுப்பில்
ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப்
பால்இன் மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொறு அழுஉம்தன் மகத்துமுகம் நோக்கி
நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண்என்
மனயோள் எவ்வம் நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண!’ (புறம். 164)