பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

கவிதையும் வாழ்க்கையும்


என்று தமது வறுமையைக் காட்டிய அவர். அவ் வறுமை காரணமாகத் தம்மை மதியாது அன்பில்லாது சிறிது பரிசு கொடுப்பாரை வெறுத்து, வந்த பரிசிலை வேண்டா என்று ஒதுக்கித் தள்ளியதையும் காணலாம். கடிநெடுவேட்டுவன் என்பான் அவர் வேண்டிய காலத்துப் பரிசில் தாராது நீட்டிக்க, அதை அறிந்த புலவர்,

‘முற்றிய திருவின் மூவ ராயினும்

பெட்புஇன்று ஈதல் யாம்வேண் டலமே!’
(புறம். 205)

என்று வெறுத்து வந்து விட்டார்.

மற்றொரு புலவராகிய பெருஞ்சித்திரனார், இளவெளிமான் சிறிது கொடுப்ப, அதைக் கொள்ளாது, குமணனைப் பாடி வேண்டியன பெற்றுத் திரும்பும் காலத்துக் குமணன் தந்த யானையை அவ் விளவெளிமான் காவல் மரத்திற்கட்டி, அவனைத் துச்சமாக,

‘இரவலர் புரவலன் நீயு மல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையு மல்லர்:
இரவலர் உண்மையும் காணினி, இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காணினி; நின்னூர்க்
கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த
நெடுநல் யானைஎம் பரிசில்;

கடுமான் தோன்றல்! செல்வம் யானே.’
(புறம் 162)

என்று வீறு தோன்றக் கூறி வந்துவிட்டார். வறுமையால் பாடிக் குமணனிடம் பெற்று வந்ததைத் தமக்கெனவே சேர்த்து வைத்துக் கொள்ளாது, அதை மனைவியிடம் கொண்டுவந்து கொடுத்து, அவளை நோக்கி,

‘இன்னோர்க்கு என்னாது, என்னெடும் சூழாது,’
‘வல்லாங்கு வாழ்தும் என்னாது. நீயும்
எல்லோர்க்குங் கொடுமதி மனகிழ வோயே!’

(புறம். 163)

என்று கூறும்போது புலவர் வாழ்ந்த பெருமிதநிலை நம் கண்முன் புலனாகின்றதன்றோ!