பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டுத்தொகை

317


மற்றொரு புலவராகிய வெள்ளைக்குடி நாகனார், அரசன் கீழுள்ளார் கொடுமை இழைத்து நிலவரிக்காக உள்ளவற்றையெல்லாம் கொண்டு செல்ல, அதற்காக அஞ்சாது, தாமே அரசனிடம் சென்று, அரசன் தன் காக்கும் நிலைகெடின் என்னகும் என்பதையும், அவன் செயல் மக்களைக் காத்தலே என்பதையும்,

‘மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும்
காவலர்ப் பழிக்கும்இக் கண்ணகன் ஞாலம்’
(புறம். 35)

என்பதையும் எடுத்துக்காட்டி, அவன் கீழ் உள்ளார் செய்த கொடுமையை விளக்கி, என்றென்றும் தம் நிலத்துக்கு வரி விதிப்பினை விலக்கிக் கொண்டார். புலவர் சிலர் அரசர் இருவர் பொரும் காலத்து இடை நின்று சந்து செய்து போர் தடுத்தும் உள்ளனர். ஒளவையாரும் கோவூர்கிழாரும் அத்துறையில் சிறந்தவராவர் என்பதை மேலே கண்டனம். எனவே, புலவர் தம் வாழ்க்கை முறையை விளக்குவதன் மூலமே அக்காலத் தமிழர் வாழ்வை ஒருவாறு விளக்கினர் எனலாம்.

நாடு அக்காலத்து அரசரால் ஆளப்பெற்றது. அன்று குடியாட்சி இல்லை; எங்கும் முடியாட்சி சிறந்துதான் விளங்கிற்று. முடியாட்சி என்றாலும், மன்னன் தன்னிச்சையாகச் சர்வாதிகாரம் செலுத்தவில்லை; மக்களைத் தழுவியே தன் ஆட்சியை நடத்தினான். அதிலும், அறிஞர் வாய்மொழிப்படி நாட்டில் நல்லன ஆற்றினன். அவன் தன்னை உயிராகவும் உலகை உடலாகவும் ஒம்பிக் காத்தான். இதைத்தான் மோசிகீரனார் என்னும் புலவர்.

"நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், ‘யான் உயிர்’ என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தர்க்குக் கடனே." (புறம். 186)