பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

கவிதையும் வாழ்க்கையும்


என்று தெளிவுபட எடுத்துக் காட்டுகின்றார். அரசன் மட்டும் இவ்வாறு நல்லவகை ஆட்சி செலுத்துதல் போதுமா? அதில் வாழும் மக்கள் வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை ஒளவையார் நன்கு விளக்குகின்றார். 'ஒரு நாட்டில் மேடு பள்ளங்கள் நிறைந்து, காடும் கரம்பும் பற்றியிருக்கின்றதே என்று யாரும் கவலைப்பட வேண்டா. அந்த நாட்டில் வாழும் மக்கள் உள உரமும் உடற் பலமும் பெற்றுப் பாடுபடுவார்களாயின், வறண்ட பாலையும் வளமார் சோலையாகலாம். மேடு பள்ளங்கள் சரி செய்யப்பட்டு வயல்வெளியாகலாம்.” என்று கூறுகின்றார். இன்று நம்நாட்டில் இந்நிகழ்ச்சியைக் கண்ணாரக் காண்கின்றோம். சமுதாய நலத் திட்டம் தேசிய வளர்ச்சித் திட்டம். என்ற பல்வேறு பெயர்களின்கீழே மக்கள் காடு மேடுகளைத் திருத்திச் சாலை அமைத்தும், நீர் வருவாயைப் பெருக்கியும், நிலச்சீர்திருத்தம் செய்தும் செம்மை வாழ்வு வாழப் பழகுகின்றார்கள். இந்தக் கருத்தைத்தான் அன்றே ஒளவையார்,

'நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!’ (புறம்.187)

என்று நிலத்தை வாழ்த்துவதன் மூலம் மக்கள் கைவண்ணத் திறன் சிறக்க வேண்டுமெனவும், அப்போதுதான் அவர்தம் வாழ்வு செம்மைப்படும் எனவும் காட்டுகின்றார்.

இவ்வாறு நல்லவர் வாழும் நாட்டை ஆளும் மன்னவன் தன்கீழ் உள்ளாரைப் போற்றிப் புரப்பதோடு, தானும் ஒழுக்க நலம் குன்றா வகையிலும், தன் நாட்டு மக்கள் ஒழுக்கம் குறைபடா வகையிலும் வாழத்தக்க நெறியிலேயும் நிற்க வேண்டும் எனப் புலவர் பலர் பாடியுள்ளனர். அப்படி ஒரு வேளை அரசன் தவறிழைப்பானாயின், ‘மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு’ என்ற குறளுக்கு ஏற்ப, இடித்து அறம் உரைக்கவும் தவற மாட்டார்கள். ‘மன்னவர் தவறிழைப்பின், பின்பு மக்களைத் திருத்துவது யார்?’ என்ற வினா அவர்