பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

கவிதையும் வாழ்க்கையும்


என்றபடி கவிதை;அறவாழ்வுக்குத் துணையாவதோடு, மறவாழ்வில் புகுவோரை மடித்துத் திருத்தும் வகைக்கும் துணையாக உதவுகின்றதன்றோ!

மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகனுடன் பாரியையும் எண்ணிப் பார்க்கவேண்டும். அவன் முல்லைக்குத் தேர் கொடுத்தவன். அவனைப் பாடினார் கபிலர்; அவனை மட்டுமன்றி மேலே கண்ட பரத்தைமை பட்டுப் பிரிந்த பேகனையும்,

‘நின்னும்நின் மலையும் பாட இன்னது
இகுத்த கண்ணிர் நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைப்ப விம்மிக்
குழலினை வதுபோல் அழுதனள் பெரிதே' (புறம். 143)

என்று பாடி, அவனை அவளுடன் சேர்ப்பித்த அப்புலவர் கபிலர். அந்தப் பாரியை,


'பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடாதாயினும்,
சுறங்குமணி நெடுங்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி' (புறம். 200)

என்று பாராட்டினர். அவன் பாடா முல்லை வாடாதிருக்கத் தன் பொற்றேர் ஈந்தான். இவையெல்லாம் மேலே கண்ட தொல்காப்பிய இலக்கணத்துக்கு இலக்கியங்களாய் அமைகின்றனவன்றோ? மயிலும் முல்லையுகூட இன்பம் பெறுவன என உணர்ந்து அவற்றின் குறைநீக்க நின்ற அம்மன்னர் செயல் தொல்காப்பியர் காட்டிய உயிர் இலக்கணத்தின் வழியே நமக்கு இலக்கியமாய் அமைகின்றன என்பதை மறுப்பார் யார்?

இனி, இவ்வுலக வாழ்வைப் பொதுப்பட நோக்கி, எத்தகைய மக்களால் இவ்வுலக வாழ்க்கை சீர்பெற்று என்றென்றும் ஓங்கும் என அக்காலப் புலவர்கள் எண்ணிப் பார்க்கின்றார்கள். புலவர் என்பவர் வறுமையில் வாடியவரே என்று கருதுதல் தவறு என்பதை மேலே கண்டோம். பாராளும் மன்னருள்ளும், அவர்தம் மகளிருள்ளும் புலவர்கள் இருந்திருக்கிறார்கள், பாண்டியன் நெடுஞ்செழியன் கூறிய வஞ்சினப்