பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

கவிதையும் வாழ்க்கையும்


பற்றியும் புறம் பற்றியும் பாடுவன யாவை என்பதும், அவற்றுள் அகவாழ்வை எவை எவை எவ்வெவ்வாறு காட்டுகின்றன என்பதும், புற வாழ்வைப் புறம் எவ்வாறு விளக்குகின்றது என்பதும். ஒருவாறு அறிந்தோம். பரந்து கிடக்கும் சங்க இலக்கியமாகிய கவிதைக் கடலுள் இரண்டொன்றே இங்கு எடுத்துக் காட்டினோம். இங்குச் சிலவற்றைக் காட்டிய காரணம், மற்றவை அவ்வளவு சிறப்புடையன அல்ல என்பதன்று. சங்க இலக்கியங்களுள் ஒவ்வொன்றும் சிறந்த பாடலேதான். ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனிப் பெரு நூல்கள் எழுதலாம். நல்லறிஞர் பலர் அந்த வழியில் இன்று நாட்டிலே பணியாற்றி வருகின்றனர். நான் இங்கே அவை வாழ்வோடு எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன என்பதைக் காட்ட ஒரு சிலவற்றையே எடுத்து விளக்கினேன். ஒவ்வொன்றைப் பற்றியும் அறிய விரும்புவோர், அவ்வந் நூல்வழிப் பயின்று, பயன் பெறுக என வேண்டி மேலே செல்கிறேன்.

அடுத்து, இச்சங்ககால வாழ்வை ஒட்டி என்றும் நிலை கெடாது நிலவும் உலகக் கவிஞராய் இன்று போற்றப்படும் வள்ளுவரது குறள் காட்டும் வாழ்க்கை நெறிபற்றிக் காண்போம்.