பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டுத்தொகை

325


எல்லாரும் உவப்ப தன்றியும்,
கல்லாற்றுப் படுஉம் நெறியுமாரதுவே,’ (புறம். 195)

என்று எடுத்துக்காட்டி, ‘மனித் சமுதாயத்துக்கே நன்மையின்றேனும், தீமையாவது இல்லாது நீங்கட்டும்,’ என்ற தம் ஆசையைக் காட்டுகின்றார். இந்த வேண்டுகோள் இன்றைய உலகத்துக்கு எத்துணைப் பொருத்தமாக அமைகின்றது! உலக வல்லரசுகளெல்லாம், விஞ்ஞான வளர்ச்சியாலும் பிற வளர்ச்சிகளிலும் உலகுக்கு நன்மை ஆற்ற வேண்டியிருக்க, அவற்றைக் கொண்டு அணுக்குண்டும் பிற குண்டுகளும் செய்து உலகைச் சுடுகாடாக்கத் திட்டமிடுவதைக் காண, இத்தகைய வாழ்க்கை உபதேசம் எத்துணைப் பயனுடையதாகின்றது! அன்று நரி வெரூஉத்தலையார் கூறிய அதே கூற்றைத்தான், இன்று நம் நாட்டுத் தலைவர்களும் பிறரும் கூறுகின்றார்கள்! நல்லது இன்றேனும், பொல்லாத இந்தக் குண்டுகள் வேண்டா. இவற்றைப் பொசுக்குங்கள் என்று வேண்டுகின்ருர்கள். அவர்கள் வேண்டுகோள் ஏற்கப் பெறுமா? இது நிற்க.

‘அறம், பொருள் வீடு என்ற மூன்றில் பொருளையும் அறத்தையும் பற்றித்தானே இதுவரையில் புறத்தில் பேசினோம்? வீடு பற்றிய பேச்சே இல்லையே!’ என்று சிலர் நினைக்கக்கூடும். வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து, என்று பரிமேலழகர் காட்டியது போன்று, அது விளக்க முடியா ஒன்று என்பதும், இவ்வுலகில் வாழும் நெறிகொண்டே உயிர் அவ் வீட்டின்பத்தைப் பெறும் நெறியையும் காணமுடியும் என்றும் கொள்ள வேண்டும். மறுமை பற்றியும், புகழ் பற்றியும், வானனாடு பற்றியும், கணிச்சிக்கூர்ம் படையோன் பற்றியும் நாம் மேலே கண்ட பாடல்களில் வருவனவெல்லாம் வீட்டினைக் குறிப்பாக உணர்த்த வருவனவேயாம் என்று கூறி அந்த அளவில் அமைவோம்.

இதுவரை கூறியவற்றான், சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகை எவையெவை என்பதும், அவற்றுள் அகம்