பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

கவிதையும் வாழ்க்கையும்


தன்னைப் போன்றே பிற எல்லா உயிர்களையும் ஒத்து நோக்கி, வையகமெல்லாம் இன்புற்று வாழ்தலே மேன்மையான வாழ்க்கை என்பதை உணர்ந்து, அறத்தாற்றில் தானும் வாழ்ந்து மற்றவரையும் வாழ வைத்துச் சிறப்பான். அவன் தன் என்பாலும் மற்றவருக்கு உதவுவான். அந்த வள்ளுவர் கண்ட உயரிய அன்பின் உயிர் வாழ்வு நாட்டில் அமையின் என்றும் நாம் வாழ்வோம்!

அடுத்து, 'அறிவு' என்பதை வள்ளுவர் எவ்வாறு விளக்குகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். அங்கேயும் அவர் உள்ளம் விரிந்து உலக உயிர்களிடந்தான் செல்கின்றது, அறிவு என்றதும், ஏதோ தேர்வுக்கு மாணவன் படிப்பதும், தேர்வில் ‘மார்க்’குகள் வாங்கி முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதுந்தான் அறிவு என்று இன்றும் பலரும் நினைக்கின்றனர். அஃது அறிவின் ஒரு கூறே தவிர, முற்றிய அறிவாகாது. மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு, என்று வள்ளுவரே கூறியபடி படிக்க வேண்டிய நல்ல படிப்புவள்ளுவர் பின் கல்வி என்று வரையறுத்துள்ள படிப்பு உண்மையில் ஓரளவு அறிவை வளர்க்கும் என்பது உண்மை தான். ஆனால், அதையே அறிவாகக் கொண்டு மற்றவர்களைப் பற்றிக் கவலையுறாது வாழ்வதை வள்ளுவர் அறிவு எனக்கொள்ள மாட்டார். நூலறிவு, உலக அறிவு இன்றேல் பயன்படாது என்பதை,


'உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பலகற்றும்
கல்லார், அறிவிலா தார்.’ (குறள், 140)

என்று திட்டமாக வரையறுத்துக் கூறுகின்றார். மற்றும்,

‘எவ்வ துறைவது உலகம், உலகத்தொடு
அவ்வ துறைவது அறிவு.’ (குறள். 426)

என்றும் காட்டுகின்றார். இவற்றால், உலகம் செல்லும் வழி விட்டுத் தான் பிறழ்ந்து செல்லாது, அவ்வுலகையும் அவ்வுலகத்தில் வாழும் உயிர்களையும் ஒத்து நோக்கி, அவற்றின் வழி தானும் கலந்து செல்லவேண்டும் என்பது புலனாகும்! 'உலக