பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள்

333


அன்பற்று வாழ்பவராலும் பயனில்லை. அவர்கள் அவியினும் வாழினும் இரண்டும் ஒன்றே என்று வெளிப்படக் கூறுகின்றார் வள்ளுவர். உடல் தோற்றத்தில் குறையிலரேனும், உள்ளத்தில் அன்பில்லாராயின், அவர்களுக்கும் அவர்களால் நாட்டுக் கும் யாதொரு பயனும் இல்லை என்பார்,

‘புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பில் லவர்க்கு?’ (குறள். 79)

என்றும்,

‘அன்பின் வழியது உயிர்நிலை; அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.’ (குறள். 80)

என்றும் கூறுகின்றார். சிலர், ‘நாங்கள் எங்கள் மனைவி மக்களிடம் அன்பாய் இருக்கின்றோமே! அது போதாதா?’ என்று கேட்பர். அவர்கள் கூறுவதுகூடச் சரி என்பது போன்று இருக்கும். ஆயினும் ‘அது வாழ்வில் எவ்வளவு பொருந்தாத ஒன்று என்பதை அதிகார அமைப்பின் மூலமே வள்ளுவர் விளக்குகின்றார்.' அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை.’ என்று கூறி, அவ்வறத்தின் வழிக்கு உற்ற துணையான மனையாளின் சிறப்பைக் கூறி, அவர் தம் வாழ்வின் வழி நன்கலனாய் விளங்கும் மக்கட்பேற்றினைக் கூறுகின்றார். அதுவரையில் 'தான் என்று தனித்து வாழ்ந்த மனிதன், தானும் மனையாளுமாகி, பின் குடும்பத்தில் குழந்தைகளோடு கலந்து, ஒன்றிய இல்லற வாழ்வில் சிறக்கின்றன். அதுவரை யில் அவன் செலுத்தும் அன்பு அல்லது பர்சமானது, யார் வேண்டித் தடுத்தாலும் இயல்பாகச் சென்று பற்றுவதாகும். அதற்குமேல் செல்லும் உள்ள நெகிழ்ச்சியே அன்பாவது. அதனாலேதான் வள்ளுவர் தம் அன்புடைமை என்னும் அதிகாரத்தை, மனை வாழ்க்கைக்கு அடுத்தபடி வையாது. வாழ்க்கைத் துணை நலம், மக்கட்பேறு இரண்டையும் கடந்து வைத்துள்ளார். அவ்வன்பின் ஆற்றலால் விருந்தோம்ப வேண்டும் என்ற உணர்வு வரும்; அதன்வழி இனியவை கூறல் முதலிய நல்லியல்புகளும் தொடர்ந்து மனிதனைப் பற்றிக் கொள்ளும். பின்பு அவன் தன் அன்பின் கண் கொண்டு