பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

கவிதையும் வாழ்க்கையும்


என்ற குறளில் இக் கருத்தை அவர் தெள்ளத் தெளிய விளக்குகின்றார். இதை அறிந்த பின்பும் சிலர் வேறு வகையில் ஐயுறலாம். ‘உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்’ என்றும், ‘மனத்தொடு வாய்மை மொழியின்’ என்றும் பலவாறு மனத்தாலும்—உள்ளத்தாலும்—அறிந்து பொய் சொல்லக்கூடாது என்று வள்ளுவர் குறிக்கின்றாரே! அது எப்படி 'பொய்யை மெய்யாக்க வழிகாட்டும்?' என்று ஐய உணர்வு எழுதல் இயல்பே. ஆனால், அந்த உள்ளமாகிய மனத்தின் உள்ளுணர்வே இதுதானே? உள்ளம், ‘அறிந்து மற்றவருக்குத் தீங்கிழைக்காதே’ என்கின்றது. அந்த அடிப்படையில் வாழ்க்கை யமைகின்றது என்பதை வள்ளுவர் எத்தனையோ இடத்தில் விளக்கியுள்ளாரே! கண்ணுல் கண்டதை எப்படி மனம் இல்லை என்று கூற ஒருப்படும்?' என்று கேட்கலாம். அந்த நிலையிலேதான் மனம் பழக்கப்பட வேண்டும் என்கின்றார் வள்ளுவர். 'கண்ணால் கண்டாலும், அதனல் மற்றவருக்குத் தீங்கு உண்டாயின், அதை வாய்மை என்று கொள்ளாதே,’ எனத்தான் மனம் வற்புறுத்துகின்றது. அம் மன எண்ணத்தின் வழியேதான் பொய்மையும் குற்றத்தின் நீங்கிய நன்மை பயக்குமாயின் வாய்மையாகின்றது. எனவே, மணமறிந்த வாய்மைதான் மற்றவருக்குத் தீங்கிழையாதது. இந்த உண்மை எந்த மொழியிலும் இல்லாத ஒன்று என்பர் பல மொழி கற்று நீதி நூல்களை நன்குணர்ந்த பெரியோர். ஆனால், வள்ளுவர் தம் கவிதையை மக்கள் வாழ்வின் அடிப்படையிலேயே அமைத்துச் செல்கின்றமையின், அவ்வாழ்வின் நன்மையே மெய்ம்மை, வாய்மை, உண்மை என்று கூறித் திட்டவட்டமாக எடுத்து விளக்குகின்றார். அவர் வழி மற்றவருக்குத் தீங்கிழைக்காத—பிற உயிருக்கு ஏதம் தாராத—இனிய வாய்மையைச் சொல்லி வையம் சிறக்குமாக!

‘செல்வம்’ என்பதை வள்ளுவர் பல வகையில் ஆய்ந்து காண்கின்றார். பொருளைச் சேர்த்து வைத்திருக்கும் ஒருவனைக் கண்டுதான் நாம்,‘செல்வன்' என்கின்றோம். ஆனல், வள்ளுவர் எத்தனையோ செல்வரை நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகின்றார். அருட்செல்வர், பொருட்செல்வர், கல்விச்செல்வர்.