பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள்

341


மறுப்பார் யாருமில்லை. நீதி மன்றத்தில் சாட்சிக் கூண்டில் நிறுத்தப்பட்ட ஒருவன ‘நான் கண்டதைக் கண்டபடியே சொல்லுகிறேன்’, என்று சொல்லவைத்துப் பிரமாணம் வாங்குவதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், வள்ளுவர் அந்த அளவிலேயே வாய்மையின் எல்லைக் கோட்டை அமைத்து முடித்துவிடவில்லை. அதுதான் அவர் எல்லைக் கோட்டின் தொடக்கம். அங்கிருந்துதான்—மற்றவர் வரையறுத்து முடிவு செய்த அந்த எல்லையிலிருந்துதான்—வள்ளுவர் வாய்மையே புறப்படுகின்றது. வாய்மையென்பது கண்டதைக் கண்டபடியே சொல்வது இருக்கட்டும். அப்புடிச் சொல்லும்போது யாருக்காவது தீமை உண்டாயின், அதனால் என்ன பயன்? வாய்மை தான் என்றாலும், அதனால் மற்றவருக்குத் தீங்கு உண்டாக்கலாமா? உலகத்தில் உயிரின் வாழ்வுதானே உயர்ந்தோரின் குறிக்கோள்? அந்தக் குறிக்கோளிலிருந்து இது தவறி வீழ்ந்த தாகாதோ? ஆம்; தவறுதான். திருவள்ளுவனார்,

‘வாய்மை எனப்படுவது யாதெனின், யாதொன்றும்
தீமை இலாத சொலல்.’ (குறள். 291)

என்று திட்டமாகக் கூறுகின்றார். ஆம்! யாருக்கும் தீமை பயவாத சொற்கள் அத்தனையும் வாய்மைதான். கண்டதைக் கண்டபடியே கூறி, அதனல் மற்றவருக்குத் தீமை உண்டாக்குவதினும், தீமை சிறிதும் கலவாத—மற்றவர்க்கு நன்மை பயக்கும்—சொற்களைப் பேசுவதே சிறந்ததாகும். இதைக் கேட்டதும் தொடர்ந்து மற்றொரு கேள்வி கேட்கத் தோன்றும் நமக்கு. அப்படியானல் மற்றவருக்குத் தீமை பயவாதநன்மை உண்டாக்கும்—சொற்களைப் பொய்யாயினும் சொல்லலாமா?’ என்ற கேள்வி எழுதல் இயல்புதான். அதற்கும் வள்ளுவர், "ஆம்" என்றுதான் பதில் தருகின்றார். யாருக்கும் யாதொரு தீங்கும் விளைவிக்காத ஒரு பொய்யினால் வேறொருவருக்கு நன்மை உண்டாகுமானல், அது கண்டதைக் கண்டபடி கூறும் வாய்மையினும் மேம்பட்டு, உண்மையில் ‘வாய்மை’ என்று போற்றப்படுவதாகும் என்கின்றார் அவர்.

‘பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்’ (குறள். 292)