பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

கவிதையும் வாழ்க்கையும்


அடுத்துத் தவம் என்பதனை வள்ளுவர் எவ்வாறு விளக்குகின்றார் என்று காண்போம். தவம் என்பது என்ன? காடு திரிந்தும் தாழ்ச்டை வைத்தும் காலம் கழிப்பதைத்தான் பலர் தவம் என்று கருதுகின்றனர். அவ்வாறு இருப்பவரைப்பற்றி நாம் குறை கூறவேண்டா. ஆனால், அவர்களால் உலகுக்குப் பயன் உண்டா? அவர்கள் தங்களைத் தூய்மைப் படுத்திக் கொண்டு, பிறவா நெறியில் சென்று வாழ்வார்கள். ஆனால், அதனால் உலக வாழ்வுக்கு—உலக உயிர்களுக்கு—என்ன பயன் என்று கேட்கலாமன்றோ திருவள்ளுவர் காட்டும் குறள் அதனினும் மேம்பட்ட கருத்தைத் தருகின்றது. தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளுதலும், பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமையுமே தவத்தின் உரு என்று அவர் கூறும் போது, எதை நோக்கினும், எப்பொருள் பற்றி ஆராயினும், அனைத்தும் மற்ற உயிர்களுக்குத் தீங்கு செய்யாது நன்மை நாடச் செய்வதே தம் கவிதையின் குறிக்கோளாக வள்ளுவர் கொள்ளுகின்றார் என்பது புலனாகின்றது.

'உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.’ (குறள். 261)

என்று, அவர் தேற்றேகாரம் கொடுத்துக் காட்டுவதை யார் மறுக்க முடியும்? ஒருவன் தவம் செய்யினும், அதனால் மற்ற உயிர்களைத் துன்புறுத்த லாகாது. மற்ற உயிர்களைத் துன்புறுத்தாமையே தவ வாழ்வின் அடிப்படை. இதனாலே தான் திருவள்ளுவனார் மற்றோர் இடத்திலே, உலக அறங்களையெல்லாம் தவம் உட்படக் கூறி, அவ்வவற்றின் ஏற்றத்தைக் காட்டிவந்த நிலையிலே, அனைத்தினுக்கும் மேலாக, ஒன்றாக நல்லது கொல்லாமை, என்று அந்த அறத்தை உச்சியில் ஏற்றிக் காட்டுகின்றார். ஆகவே, தவமாயினும், வேறு பிறவாயினும், மற்ற உயிர்களுக்குத் தீங்கிழையாது அவற்றின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையவேண்டும் என்பதே வள்ளுவர் நெறி.

இனி ‘வாய்மை’ என்பதைக் காண்போம். வாய்மை என்பது, கண்டதைக் கண்டபடியே சொல்வதைத்தான் குறிக்கும். இது எம்மொழியும் காட்டும் ஒரு செயல். இதை