பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346

கவிதையும் வாழ்க்கையும்


கண்டோம். ஆனால், அந்தக் காதலும் இடையில் முரிந்தால் வாழ்வு சிறவாது என்பதை வள்ளுவர் நன்கு உணர்ந்துள்ளார். அப் பிரிவு இந்த ஒரு பிறப்பில் மட்டுமின்றி, எப்பிறவிலும் நேரலாகாது என்று அழகாகக் கூறுகின்றார். இன்னும் தலைவனும் தலைவியும் சிறுசிறு பிணக்குக் காரணமாக ஊடுதலும் கூடுதலும், அவர் காட்டும் காதல் வாழ்வில் ஏற்றம் பெற்றுச் சிறக்கின்றன. ஒரு தலைவன் தலைவியை நோக்கி, உன்னை இந்தப் பிறவியில் விட்டுப் பிரியேன், என்று சூளுரைக்கின்றான். அதைக் கேட்டுத் தலைவி மகிழத்தானே வேண்டும்? ஆனால், அதுதான் நடைபெறவில்லை. அதற்கு மாருக, அவள் அழுதாளாம். ஏன்? ‘இம்மையில் பிரியேன்’ என்றதால், ‘அடுத்த பிறவியில் பிரிந்து விடுவாரோ?’ என்ற ஐயம், அவளை வாட்டியிருக்க வேண்டும். இதை வள்ளுவனார்,


'இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்கிறை நீர்கொண் டனள்.’ (குறள். 1315)

என்று காட்டுகின்றார். ஆம்! காதல் வாழ்வு அதுதானே? கூடினர் பிரிவ தெங்கே? எப்படிப் பிரிய முடியும்? உயிரினத் தோற்றநாள் முதல் நாளை வரையில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைக்க முடியும் என்று யாராவது கூறமுடியுமா? அதுவும் உள்ளத்தால் ஒன்றுபட்ட இருதலை புள்ளின் ஒருயிராகிய காதலரைப் பிரிப்பதென்பது இயலாத செயலன்றோ! அவ்வாறு பிரியின், அவர் இன்ப அன்பின் எல்லையே முடிவுறுமே! இவையெல்லாம் எண்ணித்தான் போலும் வள்ளுவர் காதலைத் தொடர்ந்து வரும் பிறவிகளுக்கும் கொண்டு செல்கின்றார் அவர் காட்டிய வழியே காதல் சிறக்க என நாமும் வாழ்த்துவோம்.

மேலே கண்ட சில பொருள்கள் பற்றி மட்டுமன்றி, வள்ளுவர் உலக உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத அத்துணைப் பொருள்கள் பற்றியும், என்றென்றும் நிலைக்குமாறு உயர்ந்த கருத்துக்களை வற்புறுத்துகின்றார். வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்பதைத் தம் 1330 அருங் குறட்பாக்களிலும் விளக்கியுள்ளார். அவர் கூறியவாறு வையத்துள்