பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள்

347


வாழ்வாங்கு வாழ்ந்தால், இவ்வுலகே வானுலகமாகிவிடும் என்பதையும், அந்த வானினும் மேம்பட்ட உலகத்தைப் பற்றிப் புலவர்கள் கூறுவது போன்று, என்றென்றும் வற்றாத இன்ப ஊற்றாகவே இவ்வுலகும் இயங்கும் என்பதையும், நன்கு எடுத்துக் காட்டுகின்றார். நமக்கும் அத்தகைய வாழ்வினைக் காட்டும் கவிதைகள்தாமே தேவை!

இவ் வள்ளுவர் குறள் பற்றி அறிஞர் பற்பலர் பலப்பல விதமான ஆராய்ச்சிகளை நாள்தோறும் எழுதிக் கொண்டே வருகின்றார்கள். தமிழர்தம் அகம், புறம் இரண்டையும் இவ்வளவு விரிவாக, எல்லாருக்கும் ஒப்ப. யாரும், என்றும், வள்ளுவர் போலக் கூறவில்லை என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். எனவே, நானும் அத்துறையில் அதிகம் செல்லாது இந்த அளவு நிறுத்திப் பிற கவிதைகளைக் காணலாம் என்று அமைகின்றேன். வாய்ப்புள்ளவர்கள் வள்ளுவர் பற்றி வரும் எல்லா நூல்களையும் பயிலுதல் நல்லதாகும். தமிழில் மட்டுமன்றி, ஆங்கிலம் முதலிய பிற மொழிகளிலும் இன்று குறள் பலப்பல பாராட்டுகளைப் பெற்றுச் சிறந்துள்ளதன் காரணம், அது வாழ்வை அடிப்படையாகக் கொண்டதே எனலாம்.

இதுகாறும் கூறியவற்றால், வள்ளுவர் குறட் பாக்களாகிய சிறந்த கவிதைகள் எப்படித் தமிழர்தம் அக வாழ்வையும், புற வாழ்வையும் விளக்கிக் காட்டுகின்றன என்பதை அறிந்தோம். அடுத்துக் காப்பியங்களைக் காணலாம்.