பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

5. காப்பியங்கள்


காப்பியங்கள் என்ற உடனே நமக்கு ஐம்பெருங்காப்பியங்களே நினைவுக்கு வரும். அவை ஐந்து என்ற எண்ணிலே காட்டி உரைக்கப்பட்டாலும், உண்மையில் இன்று தமிழ் உலகில் உலவுவன மூன்று காப்பியங்களேயாகும். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி என்ற மூன்றுமே இன்று வாழும் காப்பியங்கள். மற்றைய காப்பியங்கள் எனப்பட்ட வளையாபதியும், குண்டல கேசியும் வாழவில்லை எனலாம். எங்கோ சிற்சில பாடல்களே அவற்றிலிருந்து எடுத்தன என வெளியிடுகின்றனர். அவற்றின் கதைகள் மட்டும் ஒரளவு தமிழரிடையில் இருக்கின்றது. அந்தக் கதை அமைப்பைச் சரியென்று கொண்டு பார்ப்பின், அக் கதைப் போக்கு, மேற்கண்ட இலக்கியங்களின் போக்குக்குச் சற்று மாறுபட்டதாகக் காண்கின்றதோடு, ஒரே சமய நெறியைப் போற்றும் அளவில் நின்றுவிடுகின்றன. வாழ்வோடு தொடர்பு பெறாத கவிதைகளும் காப்பியங்களும் நெடுங்காலம் மக்களோடு உறவுகொண்டு வாழமாட்டா என நாம் மேலே கண்ட முடிவின்படி, ஒருவேளை இவை மறைந்து விட்டனவோ என்ற ஐயமும் உண்டாகின்றது. எப்படியாயினும், இன்று தமிழ் நாட்டில் பேரளவில் ஐம்பெருங்காப்பியங்கள் என்றாலும், உண்மையில் வாழ்வன மூன்று காப்பியங்களேயாகும். அவற்றுள்ளும் சிலப்பதிகாரம் மக்களிடைப் பயின்று வாழும் அளவுக்கு மற்றைய இரண்டும் வாழவில்லை என்றுதான் கூற வேண்டும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஆனல், சிந்தாமணி தமிழ் நாட்டிலேயே பலருக்குத் தெரியாமல் வாழ்கின்றது. சிலப்பதிகாரம் என்ற பெயர் தெரியாவிட்டாலும், ‘கோவலன் கதை’