பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

கவிதையும் வாழ்க்கையும்


சொல்லலாம். ஆகவே, இளங்கோவடிகள் அரசர் குலத் தோன்றல் என்ற ஒரு காரணத்துக்காக மட்டும் ஏற்றம் தந்து அவர் நூலைப் போற்றி, மற்றதைப் புறக்கணித்தார்கள் என்று கூற முடியாது. அன்றி, அவர்கள் அப்படிக் கூறியிருந்தாலும், இன்றைய இருபதாம் நூற்றாண்டில் வாழும் நாம் அவ்வாறு பாகுபடுத்தி உணரத் தலைப்படோம். எனினும், சிலம்பு வாழும் அத்துணைச் சிறப்பில் மேகலை வாழவில்லை. ஏன்? காரணம் ஒன்றுதான். மணியின் நூலிழைபோல, இந்நூல் முழுவதும் தொடர்ந்து காட்டப்பெறும் ஒரே காரணந்தான். அதுதான் அவை வாழ்வொடு பிணைந்துள்ள வகை பற்றியது. சிலப்பதிகாரம் மக்கள் வாழ்வை விளக்கி, அவர்தம் வாழ்வொடு தொடர்பு கொண்டுள்ள அளவில் மணிமேகலை மக்கள் வாழ்வைப்பற்றிப் பாடவில்லை. அதனுடன் சிவப்பதிகாரம் மக்கள் வாழ்வின் அடிப்படையாகிய சமரசத்தைத் தன் அச்சாணியாகக் கொண்டு அசைபோட்டு நடைபெறுகின்றது. மணிமேகலையோ, ஒரே சமயத்தைச் சார்ந்ததாகி, அத்துடன் நில்லாமல், பிற சமயங்களைப் பழித்துரைக்கும் அளவுக்கு மக்கள் வாழ்க்கை நெறியிலிருந்து வேறுபட்டுச் சென்று விட்டது. சிந்தாமணியும் ஒரு சமயம் பற்றிய காரணத்தால் அத்துணைச் சிறக்கவில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது.

தமிழ்நாட்டில் சங்க காலத்திலும், அதற்கு முன்னும் சைவம், வைணவம், பெளத்தம், சமணம் போன்ற சமயங்கள் வாழ்ந்துள்ளன. ஆயினும், அவை தம்முள் வேறுபாடு காட்டாவகையில் ஒன்றிக் கலந்து வாழ்ந்தன. சமயநெறியால் ஒருவரோடொருவர் மாறுபட்டவரும் மனம் ஒத்து வேறுபாடு காணாராய், அவ் வேறுபாடுகள் பற்றிப் பேசாராய் வாழ்ந்து வந்தனர். ஏன்? வேறுபாடு இன்னதென்பதை அறியாமலே கூட அவர்கள் வாழ்ந்தார்கள் எனலாம். சிலப்பதிகாரம் பாடிய ஆசிரியர் இளங்கோவடிகள், சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. அச் சமயத்திலிருந்து கொண்டு, பிற சமயங்களை அவர் பழித்ததாக நூல் முழுதும். எங்கே தேடினும் குறிப்புக் கிடைக்கவில்லை; அன்றிப் பிற சமயங்களை யெல்லாம்விடத் தம் சமயந்தான் உயர்ந்து நின்றது