பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பியங்கள்

351


என்பதைக் காட்டுதற்குங்கூட வழியில்லை. அதற்கு மாறாக, எடுத்துக்கொண்ட பாத்திரங்களுக்கு ஏற்ப, அவரவர் வழிபாடுகளைப் பாடும்போது, ‘அவ்வச் சமயத்தவரோ இவர்!’ என்று பயில்வார் நினைக்கும் வண்ணம் அவர் மாறிவிடுகின்றார். நூல் முழுதும் அவர் சமண சமயத்தவரே என்று காட்டக்கூடப் போதிய ஆதாரம் இல்லை. ஆய்ச்சியர் குரவையில்,


‘மடங்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனர் வஞ்சம்
கடந்தான நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்துஆ ரணம்முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராய ணாஎன்னா நாவென்ன நாவே?’

என்னும்போதும்,

‘கரியவனைக் காணாத கண்என்ன கண்ணே?’
‘திருமால்சீர் கேளாத செவிஎன்ன செவியே?’

என்னும்போதும் இவற்றைப் படிப்பவர் இவரை வைணவ அடியவராகவே யன்றோ காண்பர்? இப் பாடல்களைத் தனியாக ஆசிரியர் யாரென அறியாத ஒருவரிடம் பாடிக் காட்டினல், இப் பாடல்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ளவை என்று திட்டமாகக் கூறும் அளவுக்கு அமைகின்றன. இதைப் போன்றே வேட்டுவ வரியிலும், குன்றக் குரவையிலும் அவரவர் தெய்வ வாழ்த்தை, அவரவர் மனநிலை அறிந்து பாடி, தம்மைச் சமணர் எனப் பிறர் உணரா வகையில் மறைத்து, தம் கொள்கையையோ, சமண நெறியையோ அதில் புகுத்தாது, நேரிய முறையில் செல்கின்றார். கவுந்தி அடிகள் வழிச் சமண சமய உண்மைகளும் விளக்கப் பெறுகின்றன. ஆசிரியர் பின்பு தம் தமையன் செங்குட்டுவனைப்பற்றிப் பேசும் காலத்திலே, சிவபெருமானுக்கு உரிய ஏற்றம் கொடுத்தும் பேசுகின்றார். அவர் காலத்தில் தமிழ்நாட்டில் வளர்ந்து சிறந்த அத்துணைச் சமய நெறிகளும் அவர் நூலில் பேசப்படுகின்றன. எனினும், அவற்றுள் ஒன்றையாவது துரக்கியோ, மற்றொன்றைத் தாழ்த்தியோ பேசக் காண்கிலோம். இதைப் போன்றே, அக்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த பல மரபுகள் பற்றியும் அவர் பாடுகின்றார்