பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கவிதையும் வாழ்க்கையும்


கையாலும் பார்வை முதலியவற்றாலும் தங்கள் கருத்தை உணர்த்துவதோடு, மற்றவர்களின் கருத்துக்களையும் உணர்ந்து கொள்வதைக் காண்கின்றோம். விலங்குகளும் பறவைகளும் தம் உள்ள உணர்ச்சியை மொழிகளாலா உணர்த்துகின்றன? அவற்றின் செயலும் ஒலியும் உணர்ச்சிகளைத் தூண்டி ஒன்றிய வாழ்வினை உண்டாக்கவில்லையா? அவ்வாறே மனிதனும் மொழி உண்டாவதற்குமுன் தன் செயல்கள் மூலமும், உறுப்பு அசைவுகளின் மூலமும் தன் கருத்தை உணர்த்தியிருப்பான். ஆனல், அவன் ஊமைபோல்ப் பேசமுடியாதவன் அல்லன்: பேசத் தெரிந்தவனே. பேச்சும், சொல்லும், பிற மொழி இலக்கணங் களும் முதல் மனித இனத்துக்குத் தெரியாதன அல்லவா! எளினும், அவன் வாய் குரல் எழுப்பியிருக்கும்; இசை பாடியிருக்கும்; அச்சுறுத்தியிருக்கும்; அவலமாக அரற்றியிருக்கும். அவைகளிலெல்லாம் கவிதை நலம் நிரம்பியில்லை என்று சொல்ல முடியுமா? அப்படிச் சொல்வார்களானல், அவர்கள் கவிதையை உணர்ந்தவர்களாக முடியாது. குயிலின் இனிய குரலில் மயங்கி நிற்கும் மக்கள் எத்தனைபேர்! குயில் ஒலியின் பாட்டில் என்ன பொருள் கண்டார்கள் அவர்கள்? அது விளக்கிப் பேசியதுதான் என்ன? வண்டுகள் பண் மிழற்றும் பண்பினைப் பாராட்டிப் பாடியிருக்கின்றனரே! அதன் கருத்தென்ன? வண்டுகள் என்ன மொழியில் என்னென்ன பொருள்களை எடுத்து விளக்கின? அவற்றின் பொருள்கள் திட்டமாக நமக்குத் தெரியா. ஆனல், அவற்றின் பாடற் கவிதையில் மனம் கொடுத்துப் பரவசமடைகின்றோம். காதலனைப் பிரிந்த தலைவியருக்கு அக் குயில் ஒலி, எத்தனை ஆயாசத்தை உண்டாக்குகின்றது? சங்ககாலம் தொடங்கி இன்றுவரைத் தமிழ் நாட்டில் மட்டுமன்றி, பிற நாடுகளிலும் குயிலொலி போற்றப்படுவதை ஆங்கிலப் பாடல்கள் மூலமும், பிற வழியும் கேட்டும் படித்தும் அறிகிருேமன்றோ! அந்தப் பாட்டின் கவிதை நலம்—கலை இன்பம்—எல்லாம் மொழியின் அடிப்படையில் உண்டாயின அல்லவே! அது போன்றேதான் மனிதன் பாடும் கவிதையும், அவன் கண்ட மொழி உண்டாகும் முன்னமே தோன்றியிருக்க வேண்டும் என்று கொள்வர் அறிவுடையோர்,